சிரேஷ்ட பேராசிரியர். எச்.டி.கருணாரட்னவுக்கு ஜப்பானிய வெளி விவகார அமைச்சரின் உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது
2022/8/9

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், புகழ்பெற்ற கல்விமானுமாகிய சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.கருணாரட்னவுக்கு ஜப்பானிய வெளி விவகார அமைச்சின் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு 7, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2022 ஜுலை 29ஆம் திகதி இடம்பெற்ற வைபவத்தின் போது இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகியினால் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கை மற்றும் ஜப்பான் இடையேயான கல்விசார் பிணைப்புகளை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியிருந்த பேராசிரியர் கருணாரட்ன, நாடு முழுவதிலும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு கல்வித் திட்டங்கள், செயற்பாடுகள், ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்திருந்ததுடன், அவற்றினூடாக இரு நாடுகளுக்கிடையேயும் காணப்படும் பெறுமதி வாய்ந்த கல்விசார் பிணைப்பை வலியுறுத்தியிருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல நிலைகளை பேராசிரியர் கருணாரட்ன வகித்திருந்தார். Doctor of Business Administration திட்டத்தின் ஸ்தாபக ஒழுங்கிணைப்பாளரும், முகாமைத்துவம் மற்றும் நிதிப் பிரவின் வியாபார பொருளியல் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரியாகவும், முகாமைத்துவம் மற்றும் நிதிப் பிரிவின் முன்னாள் பீடாதிபதியாகவும் இவர் திகழ்ந்தார். இவர் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்வி நிலையங்களில் சேவையாற்றுகின்றார்.

பேராசிரியர் கருணாரட்னவின் ஜப்பானுடனான உறவு சுமார் மூன்று தசாப்த காலத்துக்கும் மேலானது. ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட Monbukagakusho (MEXT) புலமைப்பரிசிலின் கீழ் ஜப்பானின் நாகோயா பல்கலைக்கழகத்தின் பொருளியலில் PhD பட்டத்தைப் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான உறவின் உறுதியான அரணாக இவர் திகழ்வதுடன், ஜப்பானிய பட்டதாரிகள் இலங்கை பழைய மாணவர் சங்கத்தின் (JAGAAS) தற்போதைய தலைவராக, இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றார். டோக்கியோ ஸ்ரீ லங்கா பல்கலைக்கழகத்தின் அலுவலகத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் பல செயற்திட்டங்கள், பிரச்சார நடவடிக்கைகளை இவர் ஆரம்பித்திருந்ததுடன், உள்நாட்டவர்களுக்கு ஜப்பானில் கல்வியை தொடர ஊக்குவிப்புகளை வழங்கியிருந்தார்.
எழுத்தாளராக, ஜப்பானில் இவர் தங்கியிருந்த காலப்பகுதியில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை உள்ளடக்கி பல புத்தகங்களை எழுதியுள்ளார். இலங்கை ஜப்பானிய உறவுகளின் 60 வருட பூர்த்தியை முன்னிட்டு A Journey in Harmony: Sixty Years of Japan-Sri Lanka Relations (2012) எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றையும் இவர் வெளியிட்டிருந்தார்.
ஜப்பானுக்கும் வெளிநாடுகளுக்குமிடையே நட்புறவை கட்டியெழுப்புவதில் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் ஆற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் வெளி விவகார அமைச்சரின் கௌரவிப்பு வழங்கப்படுகின்றன.