UNFPA உடனான உடன்படிக்கைக்கமைய “PROMISES” எனும் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மாருக்கும் இளம் பெண்களுக்கும் அவசர மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஜப்பான் கையளிப்பு
2022/8/9

பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு சுமார் 26 மில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்தார். ஆகஸ்ட் 8 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வு, UNFPA உடனான பங்காண்மையின் கீழ் பெண்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் பாலின வன்முறைகள், இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பான தகவல் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்வதை மேம்படுத்தல் (PROMISES) எனும் திட்டத்தின் கீழ் இந்த அவசர உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த கையளிப்பு நிகழ்வில், இலங்கைக்கான UNFPA இன் பிரதிநிதி குன்லி அதேனியி கலந்து கொண்டிருந்ததுடன், யுவதிகள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த உதவிகளின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியிருந்தார்.
இனப்பெருக்க சுகாதாரத்துக்கு அவசியமான மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் (ஒக்சிடோசின், மிசோபுரொஸ்டொல் மற்றும் மக்னீசியம் சல்பேட்) போன்ற கர்ப்பிணித் தாய்மாருக்கு அவசியமான மருந்துப் பொருட்கள் நாடு முழுவதிலும் விநியோகிக்கப்பட்டதுடன், 215,000 கர்ப்பிணி தாய்மார் மற்றும் இளம் பெண்களின் நலனுக்கு அவசியமான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கும் பங்களிப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் தூதுவர் மிசுகொஷி கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் இளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரின் நலனுக்காக, UNFPA இனால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு எம்மால் பங்களிப்பு வழங்க முடிந்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில், வெவ்வேறு பிரிவுகளினூடாக இலங்கையின் மக்களுக்கு உதவிகளை ஜப்பான் விரும்புவதுடன், அதனூடாக ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவை மேலும் வலிமைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
2019 ஆம் ஆண்டில் “PROMISES” எனும் திட்டம் “G7பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு (WPS) பங்காண்மை முன்னெடுப்பு” என்பதன் கீழ் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையை தனது பங்காளர் நாடாக ஜப்பான் தெரிவு செய்திருந்ததுடன், இது வரையில் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான உதவிகளை வழங்கியுள்ளது.