மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் (JDS) திட்டத்துக்காக ஜப்பான் ரூ. 761 மில்லியன் உதவி

2022/8/9

பொதுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் திறன் கட்டியெழுப்பும் மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் (JDS) திட்டத்துக்காக ஜப்பானிய அரசாங்கம் சுமார் ரூ. 761 மில்லியனை நன்கொடையாக வழங்கியுள்ளது.
  
282 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ. 761 மில்லியன்) தொகையினூடாக, இலங்கையின் பொதுத் துறையைச் சேர்ந்த பல்வேறு கனிஷ்ட நிலை நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானின் பல்கலைக்கழகங்களில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும். அதனூடாக எதிர்காலத்தில் அவர்களை தமது பிரிவுகளில் தேசிய மட்டத்தில் தலைவர்களாக திகழ்வதற்கான தயார்ப்படுத்தல் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 17 பொதுத் துறை அதிகாரிகள் 2 வருட கால மாஸ்டர் அல்லது PhD பட்டக் கற்கையை தொடர்வதற்கு 2023 முதல் 2025 வரையான காலப்பகுதியினுள் அனுப்பப்படுவார்கள். பொதுக் கொள்கை, பெரும்பெருளாதாரம், பொது நிதி மற்றும் முதலீட்டு முகாமைத்துவம்,தொழிற்துறை அபிவிருத்திக் கொள்கைமற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு  மற்றும் நகர மற்றும் பிராந்திய அபிவிருத்தி போன்ற பிரிவுகளில் அவர்களின் பட்டப்படிப்புகள் அடங்கியிருக்கும்.
 

இந்தத் திட்டத்துக்கான உடன்படிக்கையில் 2022 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
 

நீண்ட கால நட்பு நாடு எனும் வகையில் நீண்ட கால நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான மனித வளங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளை பல திறன் விருத்தி மற்றும் ஆளுமை விருத்தி திட்டங்களினூடாக ஜப்பான் முன்னெடுக்கின்றது.
 
2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது முதல், JDS திட்டத்தினால் இலங்கையின் 188 பொது அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு மாத்திரம் இந்தத் திட்டத்தினூடாக பங்களிப்பு வழங்கப்படாமல், இலங்கையின் பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் சார் திறனை கட்டியெழுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனூடாக, தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு எதிர்காலத்தில் சுபீட்சமாகத் திகழ்வதற்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.
 
 JDS அங்கத்தவர்களுக்கு ஜப்பானில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தமது கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளினூடாக தமது மனித வலையமைப்பை பயன்படுத்தி பரஸ்பர உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
 
இலங்கையுடன் 70 வருடகால நெருக்கமான நட்புறவுகளைப் பேணும் ஜப்பான், இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளது.