தேசமான்ய பேராசிரியர். டபிள்யு.டி.லக்ஷ்மன் மற்றும் திருமதி. கல்யாணி லக்ஷ்மன் ஆகியோருக்கு ஆகஸ்ட் 22 ஆம் திகதி “the Order of the Rising Sun” கௌரவிப்பு வழங்கப்பட்டது

2022/8/25

2022 ஆகஸ்ட் 22 ஆம் திகதியன்று, தேசமான்ய பேராசிரியர். வெலிகமகே டொன் லக்ஷ்மனுக்கு “The Order of the Rising Sun, Gold Rays with Neck Ribbon” எனும் கௌரவிப்பையும், அவரின் துணைவியாரான திருமதி. கல்யாணி சிரிசீலி லக்ஷ்மன் அவர்களுக்கு “The Order of the Rising Sun, Gold Rays with Rosette” கௌரவிப்பையும் வழங்கும் நிகழ்வு இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர் மிசுகொஷி ஹிதேகியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையே கல்வி ஊடாக பரஸ்பர நட்பை ஊக்குவிப்பதில் தேசமான்ய பேராசிரியர். வெலிகமகே டொன் லக்ஷ்மன் மற்றும் திருமதி. கல்யாணி சிரிசீலி லக்ஷ்மன் ஆகியோர் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
 
இந்த ஆண்டில் 70 வருட பூர்த்தியைக் குறிக்கும் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுப் பயணத்தில், பேராசிரியர் லக்ஷ்மன் மற்றும் திருமதி லக்ஷ்மன் ஆகியோர் கற்பித்தலுக்காக ஆற்றியிருந்த பங்களிப்பு, அவர்களின் செயற்பாடுகள் போன்றவற்றை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி பாராட்டியிருந்தார். பேராசிரியர் லக்ஷ்மன் மற்றும் திருமதி லக்ஷ்மன் ஆகியோர் இந்த ஆணையை பெற்றுக் கொண்டமை தொடர்பில் தமது நன்றிகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
 

இலங்கையின் கல்வித் துறையில் முக்கிய நபராக பேராசிரியர். டபிள்யு.டி.லக்ஷ்மன் திகழ்ந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரும், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமாக இவர் திகழ்ந்தார். ஜப்பானிய கற்கைகள் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கையில் ஊக்குவித்திருந்ததுடன், சில ஜப்பானிய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிலையங்களுக்கு விஜயம் செய்யும் பட்டம் பெற்றவர் எனும் வகையில் கற்பித்தல் மற்றும் இணைந்த ஆய்வுகளை முன்னெடுப்பது போன்றவற்றினூடாக கல்விசார் ஈடுபாடுகளை மேம்படுத்தியிருந்தார். இலங்கையின் முதலாவது பிராந்திய கற்கைத் திட்டமாக, 1987 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயர் கற்கைகள் பீடத்தில் ஜப்பானிய கற்கைகள் மாஸ்டர்ஸ் கற்கையை இவர் நிறுவியிருந்தார். இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகளின் 50 வருட பூர்த்தியை முன்னிட்டு, கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டிருந்த நினைவேட்டின் மேற்பார்வைகளை இவர் மேற்கொண்டிருந்தார். பல ஜப்பானிய பல்கலைக்கழகங்களுடனான ஒன்றிணைந்த செயற்பாட்டை பேராசிரியர் லக்ஷ்மன் ஊக்குவித்திருந்தார்.
 

தமது ஜப்பானிய மொழித் திறமையுடன், திருமதி. கல்யாணி சிரிசீலி லக்ஷ்மன், 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் உயர் பாடசாலை பாடவிதானத்தில் ஜப்பானிய மொழி கற்பித்தலை அறிமுகம் செய்திருந்தார். இவற்றில் தேவி பாலிகா வித்தியாலயம், லின்ட்சே பெண்கள் உயர் பாடசாலை மற்றும் யசோதரா தேவி பாலிகா வித்தியாலயம் ஆகியன அடங்கியிருந்தன. அத்துடன், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஜப்பானிய மொழிப் பயிற்றுவிப்பு கற்கையும் இவரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஜப்பானிய கலாசாரம் தொடர்பில் நன்கு பரீட்சியமான திருமதி. லக்ஷ்மன், கராதே வகுப்புகள், 5s கட்டமைப்பு மற்றும் “ஜப்பானிய தினம்” ஆகியவற்றை தேவிபாலிகா வித்தியாலயத்தின் அதிபராக இவர் திகழ்ந்த போது அறிமுகம் செய்திருந்தார். ஜப்பான் மீதான தமது ஈடுபாடு மற்றும் நன்மதிப்பு போன்றவற்றினூடாக, திருமதி. லக்ஷ்மன் இலங்கை மற்றும் ஜப்பானிடையே பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தார்.
 
தேசமான்ய பேராசிரியர். டபிள்யு.டி.லக்ஷ்மன் மற்றும் திருமதி. கல்யாணி சிரிசீலி லக்ஷ்மன் ஆகியோரின் பெருமைக்குரிய பணிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயும் பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் காண்பித்திருந்த நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக ஜப்பானிய தூதரகம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
 
ஜப்பானுடன் நட்புறவை மேம்படுத்துவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு ஜப்பானிய அரசரால் “The Order of the Rising Sun” கௌரவிப்பு வழங்கப்படுகின்றது.