இலங்கையின் கண் தான சங்கத்துக்கு “ஜப்பானிய வெளியுறவுகள் அமைச்சரின் கௌரவிப்பு”
2022/9/8

இலங்கை கண் தான சங்கத்துக்கு ஜப்பானிய வெளியுறவுகள் அமைச்சரின் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அரங்கில் 2022 செப்டெம்பர் 6 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் போது, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி இந்த கௌரவிப்பை வழங்கியிருந்தார். 71 வருடங்களுக்கு முன்னதாக மறைந்த ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களால் சான் பிரான்சிஸ்கோ சமாதான சம்மேளனத்தில் ஆற்றிய உரையை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற விசேட தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
1955 ஆம் ஆண்டு இலங்கை கண் தான சங்கம் நிறுவப்பட்டது. இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையெ நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதன் அடையாளமாக மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களால் இந்த சங்கம் நிறுவப்பட்டிருந்தது. இந்தச் சங்கம் நிறுவப்பட்டது முதல், தற்போது வரையில், 8000 க்கும் அதிகமான விழிவெண்படலங்களை (வருடாந்தம் 200க்கும் அதிகமானவை) ஜப்பானுக்கு வழங்கியுள்ளது. இதில் மறைந்த ஜனாதிபதியின் விழி வெண்படலமும் அடங்கும். அவரின் இடதுபுற விழிவெண்படலம் ஜப்பானிய பெண் ஒருவருக்கும், வலதுபுற விழிவெண்படலம் இலங்கை பிரஜை ஒருவருக்கும் வழங்கப்பட்டிருந்தன.

மக்களுக்கு இலங்கை கண் தான சங்கம் ஆற்றி வரும் அர்ப்பணிப்பான சேவைகளை கௌரவிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்குமிடையிலான உறுதியான நட்புறவை குறிக்கும் வகையிலும், ஜப்பானிய அரசாங்கத்தினால் மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் போன்றன வழங்கப்படுகின்றன.
ஜப்பானுக்கும் வெளிநாடுகளுக்குமிடையே நட்புறவை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சரின் கௌரவிப்புகள் வழங்கப்படுகின்றன.