ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

2022/9/27

ஜப்பானின் மறைந்த பிரதமர் அபோ ஷின்சோ அவர்களின் இறுதிக் கிரிகைகளில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன், ஜப்பானின் வெளி விவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமாசா, செப்டெம்பர் 27 ஆம் திகதி சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
 
இந்தச் சந்திப்பின் போது, அரச மரியாதையுடன் இடம்பெற்ற மறைந்த பிரதமரின் இறுதிக் கிரியைகள் நிகழ்வில் பங்கேற்றிருந்தமைக்காக ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அமைச்சர் ஹயாஷி நன்றி தெரிவித்ததுடன், இலங்கையின் சிறந்த நண்பராகத் திகழ்ந்த முன்னாள் பிரதமர் அபேயின் இழப்புக்கு இரங்கலை ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.
 
இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதற்கு ஜப்பானின் நிலைப்பாடு தொடர்பில் அமைச்சர் ஹயாஷி தெரிவித்திருந்ததுடன், சுதந்திரமானதும் திறந்த இந்தோ-பசுபிக் (FOIP) நோக்கத்தை நிறைவேற்றும் எண்ணத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மனித நேய உதவி மற்றும் தற்போது மேலதிகமாக வழங்கப்படும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார். இந்த உதவிகளை வழங்கியிருந்தமைக்காக, இலங்கையின் நீண்ட கால நட்பு நாடாகத் திகழும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
 
சர்வதேச விதிமுறைகள் மற்றும் நியமங்களுக்கமைய, வெளிப்படையான மற்றும் நேர்த்தியான முறையில் அபிவிருத்தி நிதித் திட்டத்தின் முக்கியத்துவத்தை ஹயாஷி குறிப்பிட்டிருந்தார். சகல கடன் வழங்கிய நாடுகளின் பங்குபற்றலுடன், வெளிப்படையான முறையில் கடன் மீளமைப்பை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ஹயாஷி ஆகியோர் பொதுவான புரிந்துணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ஹயாஷி ஆகியோர், உக்ரேனில் நிலவும் சூழல் மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் காணப்படும் சூழ்நிலை போன்ற சர்வதேச நிலைவரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டதுடன், முரண்பாடுகளை முறையாக தீர்த்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பகிர்ந்து கொண்டனர். மேலும், வட கொரியாவில் இடம்பெறும் கடத்தல்கள் மற்றும் அணு ஆயுதங்கள் மற்றும் செப்டெம்பர் 25 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பலிஸ்டிக் மிசைல் சோதனை அடங்கலான ஆயுதங்கள் தொடர்பில் நெருக்கமாக இணைந்து செயலாற்றுவதற்கும் உறுதியளித்திருந்தனர். படைக்குறைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் மீளமைப்பு ஆகிய சர்வதேச பிரச்சனைகள் தொடர்பில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கும் இரு நாடுகளும் உறுதியளித்திருந்தன.