ஜப்பான் – இலங்கை உயர்மட்ட சந்திப்பு

2022/9/29

ஜப்பானின் மறைந்த முன்னாள் பிரதமர் அபே ஷின்சோவின் அரச இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜப்பானிய பிரதமர் கிஷிடா ஃபுமியோ செப்டெம்பர் 28 ஆம் திகதி சந்தித்திருந்தார்.
 
சந்திப்பின் ஆரம்பத்தில், மறைந்த பிரதமரின் அரச மரியாதையுடன் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்றமைக்காக ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு, பிரதமர் கிஷிடா தமது நன்றியைத் தெரிவித்திருந்தார். அவரின் மறைவின் அதிர்ச்சியிலிருந்து தாம் இன்னமும் மீளவில்லை எனவும், அபே பிரதமராக கடமையாற்றிய காலப்பகுதியில், அவருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியிருந்ததைத நிறைவுகூர்ந்ததுடன், அவரின் மறைவுக்கு தமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்திருந்தார்.
 
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை குறிக்கும் வகையில், ஜப்பானின் நோக்கான “சுதந்திரமானதும் திறந்த இந்தோ-பசுபிக்” (FOIP) பிராந்தியத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கையுடன் பரஸ்பர உறவுகளை மேலும் வலிமைப்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் கிஷிடா குறிப்பிட்டார்.  ஜப்பானின் நீண்ட கால நட்பு நாடு எனும் வகையில், தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் மனிதநேய உதவிகளை ஜப்பான் வழங்குவதையும் பிரதமர் கிஷிடா குறிப்பிட்டார்.
 
சர்வதேச விதிமுறைகள் மற்றும் நியமங்களின் பிரகாரம் வெளிப்படையான மற்றும் நேர்த்தியான அபிவிருத்தி நிதித் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பிரதமர் கிஷிடா குறிப்பிட்டதுடன், இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கிய சகல நாடுகளின் பங்கேற்புடன், வெளிப்படையானதும், ஒப்பிடக்கூடியதுமான வகையில் இலங்கையில் கடன் மீளமைப்பை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய பொது புரிந்துணர்வையும் பிரதமர் கிஷிடா மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆகியோர் பகிர்ந்திருந்தனர்.
 
பிராந்தியத்தில் காணப்படும் நிலைவரம் தொடர்பிலும் தமது நிலைப்பாடுகளைப் பற்றி இருவரும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.