இலங்கைக்கான 3.5 மில். அமெ.டொலர் அவசர உதவிக்கான உடன்படிக்கையில் ஜப்பான் கைச்சாத்து
2022/9/30

ரோம், ஜெனிவா மற்றும் நியுயோர்க் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஜப்பானிய இராஜதந்திர அலுவலகங்கள் இணைந்து, இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர உதவித் தொகையை வழங்குவதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளன. செப்டெம்பர் 16 ஆம் திகதி இந்த ஆவணங்களில், WFP, IFRC மற்றும் யுனிசெவ் தலைமையகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த உதவிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் முன்வந்திருந்தது. இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் நிறைந்த பொருளாதார மற்றும் மனிதநேய நிலைகளிலிருந்து மீட்பதற்கும், நிவாரணமளிப்பதற்கும் உதவும் வகையில் இந்த அவசர உதவி அமைந்துள்ளது.
உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் (WFP) உடன் இணைந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த உணவு பொருட்களை வழங்குவதுடன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் (IFRC) ஆகியவற்றினூடாக உணவு, போஷணை, சுகாதாரம், தூய்மை போன்றவற்றுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஊடாக 0.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த போஷணைப் பொருட்களையும் இலங்கை மக்களுக்காக வழங்கும்.

மே மாதம் 20 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவி தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து, தற்போதைய நிலையில் மேலும் உதவிகளை வழங்க ஜப்பானிய அராசாங்கம் முன்வந்துள்ளதனூடாக, மொத்தமாக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மக்களின் நலனுக்காக ஜப்பான் பங்களிப்பு செய்துள்ளது. இலங்கையின் நீண்ட கால நட்பு நாடு எனும் வகையில், இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த சவால்கள் நிறைந்த சூழலிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு இந்த உதவிகள் பங்களிப்பு வழங்கும் என ஜப்பான் எதிர்பார்த்துள்ளது.
இலங்கையின் அவசரத் தேவைகள் மற்றும் நிலைபேறான விருத்தி போன்றவற்றை நிவர்த்தி செய்வதற்கு ஜப்பான் மேலும் தமது ஆதரவை வழங்க தயாராகவுள்ளது.