பச்சை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான பரஸ்பர ஒன்றிணைவு தொடர்பான இணைந்த கடன் பொறிமுறையில் ஜப்பானிடமிருந்து வலு மற்றும் சூழல்சார் முதலீடுகள்
2022/10/10

குறைந்த காபன் வளர்ச்சி பங்காண்மைக்கான இணைந்த கடன் பொறிமுறை (JCM) உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி. அனில் ஜாசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு ஒக்டோபர் 10 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொண்டார். இந்த உடன்படிக்கையின் பிரகாரம், ஜப்பானின் முன்னணி காபனகற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் முதலீடு மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தினூடாகவும், புதுப்பிக்கத்தக்க வலு ஊக்குவிப்பினூடாகவும், இலங்கையில் பச்சை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நிலைபேறான அபிவிருத்திக்கு ஜப்பான் பங்களிப்பு வழங்கும்.

2011 ஆம் ஆண்டு முதல் JCM தொடர்பில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் ஜப்பான் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதுடன், JCM பங்காண்மையில் 23 ஆவது பங்காளர் நாடாக இலங்கை தெரிவாகியிருந்தது. இந்தப் பங்காண்மையின் கீழ், ஜப்பானிய அரசாங்கத்தினால் நிதி உதவிகள் வழங்கப்படுவதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு ஜப்பானிய நிறுவனங்களிலிருந்து முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றன வழங்கப்பட்டு, நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்கும், 2050 ஆம் ஆண்டளவில் பச்சை இல்ல வாயு வெளியீட்டு இலக்குகளை எய்துவதற்கும் உதவிகள் வழங்கப்படும்.

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருட பூர்த்தியைக் கொண்டாடும் நிலையில், இந்தப் பங்காண்மையினூடாக, இலங்கையின் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்காக சூழல் மற்றும் வலுத் துறைகளினூடாக பங்களிப்பு வழங்குவதுடன், சர்வதேச மட்டத்தில் காலநிலை மாற்றத்தை இணைந்து தடுக்கும் வகையில் செயலாற்றுவோம்.