இலங்கை அரசாங்கம் மற்றும் IOM உடன் இணைந்து திரும்பிவரும் புலம்பெயர்ந்தோருக்காக தையல் மற்றும் பயிற்சி நிலையத்தை காலி மாவட்டத்தில் நிறுவுவதற்கு ஜப்பான் உதவி

2022/10/17

காலி மாவட்டத்தில், 2022 ஒக்டோபர் 15 ஆம் திகதி, தையல் மற்றும் பயிற்சி நிலையமொன்றை ஜப்பானிய தூதரகத்தின் தூதுக்குழுவின் பிரதித் தலைவரும், அமைச்சருமான கட்சுகி, வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நானயக்கார ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
 

 
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த தையல் மற்றும் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், சுமார் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிப்புடன் IOM இனால் நிறுவப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இலங்கைக்கு மீளத் திரும்பிய இலங்கையின் வெளிநாட்டு பணியாளர்களை சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் மீள இணைப்பதற்கு ஆதரவளிக்கும் திட்டம், சமூக பொருளாதார விருத்தி மற்றும் புலம்பெயர்ந்து பணியாற்றி மீளத்திரும்பியோரை சமூகத்தில் சுமூகமாக மீள இணைப்பது போன்றவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.


வெளிநாடுகளில் பணிபுரிந்து மீளத்திரும்பியவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளைக் குறைக்கும் வகையிலும், சமூகத்தில் அவர்களை மீள இணைத்து, திறன்களை விருத்தி செய்து கொள்ள ஊக்குவிக்கும் வகையிலும், விசேடமாக பெண்கள் மற்றும் இளைஞர்களில் கவனம் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் காணப்படும் பல்வேறு உள்ளம்சங்களில் ஒன்றாக இந்த நிலையம் அமைந்திருக்கும். இந்தத் திட்டத்தினூடாக, வெளிநாடுகளில் பணியாற்றி மீளத்திரும்பியவர்களுக்கு தமது சமூகப் பொருளாதார திறன்களையும், தொழில்முயற்சியாண்மையையும் கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த நிலையத்துக்கு மேலதிகமாக, இலங்கையின் 9 மாவட்டங்களில் வெளிநாடுகளில் பணிபுரிந்து மீளத் திரும்பியவர்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்கு மேலும் 21 திட்டங்கள் வடிவமைக்கப்படும்.


இந்த ஆண்டு, ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருடங்கள் பூர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்த ஏழு தசாப்த காலப்பகுதியில், இலங்கைக்கு ஜப்பானினால் பெருமளவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் சமாதானம் மற்றும் சமூகப் பொருளாதார விருத்தியை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகளும், மக்களின் வாழ்வாதார மேம்படுத்தல் மற்றும் வலுவூட்டல்களும் அடங்கியுள்ளன. இந்த ஆண்டில் மாத்திரம், இதுவரையில் ஜப்பானினால், 36.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடி, மத்திய கால மற்றும் நீண்ட கால உதவிகளாக இலங்கை மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையத்தினூடாக இலங்கையிலுள்ள புலம்பெயர் பணியாளர்களுக்கு எதிர்கால வாய்ப்புகளை விரிவாக்கம் செய்து கொள்வதற்கு அவசியமான பிரயோக பணியாற்றல் திறனை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு இந்த நிலையத்தினூடாக அவசியமான வசதிகள் வழங்கப்படும் என ஜப்பானிய அரசாங்கமும், மக்களும் நம்புகின்றனர்.