இலங்கையின் வட பிராந்தியத்தில் மனிதநேய கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் ஆதரவு
2022/10/19

இலங்கையின் வட பிராந்தியத்தில் மனித நேய கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக HALO Trust அமைப்புக்கு 647,887 அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக ரூ. 230 மில்லியன்) ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த நன்கொடைக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி, கொழும்பிலுள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இதில், ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் HALO Trust நிகழ்ச்சி முகாமையாளர் ஸ்டீபன் ஹோல் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இலங்கையில், 2002 ஆம் ஆண்டில் HALO தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இந்த அமைப்பின் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் 20சதவீதமான பங்களிப்பை ஜப்பான் வழங்கியிருந்தது. இந்த நிதியாண்டுக்கான திட்டத்தினூடாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளக இடம்பெயர்ந்த 11,000 மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தி, பாதுகாப்பான காணிகளைப் பெற்றுக் கொடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமைந்துள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் பெருமளவு உதவிகளை வழங்கிய வண்ணமுள்ளது. இலங்கையில் தற்போது இயங்கும் நான்கு கண்ணி வெடி அகற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குகின்றது. இந்தத் திட்டத்துக்காக 42.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை Grant Assistance for Grassroots Human Security Project (GGP) ஊடாக வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு, ஜப்பான் மற்றும் இலங்கை இடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியில் முன்னுரிமையளிக்கப்படும் பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதற்கு உதவுவது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கண்ணி வெடி அற்ற இலங்கையை எய்தும் இலங்கையின் இலக்குக்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும்.

இந்த மானிய ஒதுக்கீடு தொடர்பில் ஸ்டீபன் ஹோல் கருத்துத் தெரிவிக்கையில், “நீண்ட காலமாக எமது நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வரும் ஜப்பானிய அரசாங்கத்துக்கு HALO Trust ஐச் சேர்ந்த நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இலங்கையின் வட பிராந்தியத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு இருபது வருட காலமாக ஆதரவளிப்பதுடன், இதனூடாக ஏழு சதுர கிலோமீற்றர் பரப்பு பகுதி கண்ணி வெடியிலிருந்து முற்றாக அகற்றப்பட்ட பகுதிகளாக அமைந்துள்ளன. இந்த செயன்முறையில், 54,000 க்கும் அதிகமான கண்ணி வெடிகளிளும், ஆயிரக் கணக்கான இதர வெடி பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன. இவற்றினூடாக தற்போது எவ்விதமான பாதிப்புகள், காயம் அல்லது உயிரிழப்பு போன்றன தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்ணி வெடி அகற்றலினூடாக, உள்ளக இடம்பெயர்ந்தவர்களை பாதுகாப்பாக தமது பகுதிகளில் மீளக் குடியேர அனுமதித்துள்ளது. அத்துடன், விடுவிக்கப்பட்ட காணிகளை உற்பத்தித்திறன் வாய்ந்த வகையில் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. ஜப்பானின் நிதியளிப்பினூடாக, உள்நாட்டு ஆண் மற்றும் பெண்களுக்கு நிரந்தர வாழ்வாதார வருமானத்தைப் பெற்றுக் கொள்ள வழியேற்படுத்தியுள்ளது. HALO Trust இனால் ஜப்பானிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான உதவியுடன், மற்றும் ஏனைய மூன்று கண்ணி வெடி அகற்றும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து, 2028 ஜுன் 1ஆம் திகதியளவில் இலங்கையை கண்ணி வெடி அற்ற நாடாக மாற்றும் தனது கடப்பாட்டை பூர்த்தி செய்ய உதவுவதாக அமைந்திருக்கும்.” என்றார்.