ஐ.நா.பெண்கள் அமைப்பு மற்றும் ஜப்பானிய அரசாங்கம் இணைந்து இலங்கையில் நெருக்கடிகளுக்கு மத்தியில் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவு

2022/10/27
கொழும்பு, இலங்கை (26 ஒக்டோபர் 2022) –“நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, எனது கணவரின் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. முழுக்குடும்பமும் தற்போது என்னில் தங்கியுள்ளது.” என அம்பாறையில் தையல் தொழிலில் ஈடுபட்டுவரும் கே. வனிதா தெரிவித்தார். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், கொள்முதல் செய்யும் ஆற்றல் பெருமளவில் குறைவடைந்துள்ளது. வனிதாவைப் போலவே, பல பெண் தொழில் முயற்சியாளர்களும், பல சுமைகளுக்கு முகங்கொடுப்பதுடன், தமது வியாபாரத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு, ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் 50.4 மில்லியன் ரூபாய் (அண்ணளவாக 140,000 அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான சாதனங்கள் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்யும் சொத்துகளை வழங்கியிருந்தது. ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி, தையல் இயந்திரங்கள் மற்றும் மா அரைக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஒக்டோபர் 26 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கையளித்திருந்தார். அம்பாறை, மொனராகலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 384 பெண்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

“பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை இலங்கையில் செயற்படுத்துவது” எனும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் 3 ஆண்டு காலத் திட்டத்தின் பிரகாரம் இந்த உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் நிதி உதவிகளை வழங்குகின்றது.
 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா சமன்மலி குமாரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டத்தினூடாக பிரதேச செயலக மட்டத்தில் 100 க்கும் அதிகமான அதிகாரிகளின் திறன்களை கட்டியெழுப்ப முடிந்துள்ளது. இவர்கள் ஏனைய பெண்களின் மீட்சிக்காக வலுவூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், இலங்கைச் சமூகத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் செயலாற்றுவார்கள்.” என்றார்.


நிவாரணம் மற்றும் மீட்சி முயற்சிகளில் பெண்கள் மற்றும் மகளிரை உள்வாங்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைப்பங்குக்கும் அதிகமானவர்களான பெண்கள் மற்றும் மகளிரை ஈடுபடுத்துவதனூடாக, உள்ளடக்கமான அபிவிருத்தியை எய்தக்கூடியதாக இருக்கும். ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் இலங்கையுடனான எமது நீண்ட கால பங்காண்மையினூடாக, 2030 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய நிகழ்ச்சிநிரலுக்கமைய பெண்கள் வலுவூட்டல் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் தம்மை அர்ப்பணித்துள்ளது.” என்றார்.

இந்தத் திட்டத்தின் அங்கமாக, ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் Chrysalis ஆகியவற்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்த திறன் கட்டியெழுப்பல் மற்றும் தொழில்முயற்சியாண்மை தொடர்பான பயிற்சிகளை, சுமார் 800 பெண்கள் பெற்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி எஸ்தர் ஹுல் கருத்துத் தெரிவிக்கையில், “பெண்களின் பொருளாதார வலுவூட்டலில் முதலீடு செய்வது என்பது ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் பிரதான கருப்பொருள்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக ஆதரவளிக்கப்படும் தொழில்முயற்சியாளர்களுக்கு நேரடியான வியாபார பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர்களின் தொழில்முயற்சிகளை நிறுவுவதற்கு ஆதரவளிக்கப்படுகின்றது. அவர்களின் வியாபார தந்திரோபாயங்களை நடைமுறைப்படுத்த உதவிகள் வழங்கப்பட்டு, தொடர்ச்சித் தன்மை, வளர்ச்சி மற்றும் பன்முகப்படுத்தலையும் உறுதி செய்யப்படுகின்றது.” என்றார்.


வனிதா அடங்கலாக இந்தப் பயிற்சிகளில் பங்கேற்றிருந்த பங்குபற்றுநர்கள், வியாபாரத் திட்டங்களை வடிவமைத்திருந்ததுடன், இவற்றை உள்ளூராட்சி அதிகாரிகள், துறைசார் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வெளியக பங்காளர்கள் ஆகியோரைக் கொண்ட சுயாதீன நடுவர் குழு மீளாய்வு செய்திருந்தது. இவர்கள் இந்தத் திட்டங்களின் நடைமுறைச் சாத்தியம் தொடர்பில் ஆராய்ந்திருந்ததுடன், கோரப்பட்டிருந்த ஆதரவை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தனர். பயிர்ச் செய்கை, விவசாய-வியாபாரம், ஆடைத் தொழிற்துறை, கால்நடை வளர்ப்பு, உணவு உற்பத்தி, வாசனைத்திரவியங்கள் உற்பத்தி, சிறு பல்பொருள் வியாபாரங்கள், தெங்கு மற்றும் பனை பெறுமதி சங்கிலிகளுக்கு பெறுமதி சேர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் இந்த தொழில்முயற்சிசார் திட்டங்கள் அடங்கியிருந்தன.

தமது தையல் தொழிலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தையல் இயந்திரமொன்றைப் பெற்றுக் கொண்ட வனிதா கருத்துத் தெரிவிக்கையில், “தைத்த ஆடைகளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், பலர் தற்போது துணிகளை வாங்கி தமக்கு அவசியமான ஆடைகளை தைப்பதற்கு ஆரம்பித்துள்ளனர். இதனால் எனது வியாபார செயற்பாடுகளை விரிவாக்கம் செய்யவும், எதிர்காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.