மத்திய மாகாணத்தின், ராகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பின்தங்கிய குடும்பங்களுக்கு ஜப்பான் அவசர உணவுப் பொதிகள் விநியோகம்

2022/11/3

மத்திய மாகாணத்தின் ராகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பின்தங்கிய குடும்பங்களுக்கு அவசர உணவுப் பொதிகளை ஜப்பான் வழங்கியுள்ளது. உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்துடன் (WFP) இணைந்து இந்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டிருந்தன. மத்திய மாகாணத்துக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்தீகி ஆகியோர் இந்த உணவுப் பொதிகளை கையளித்திருந்தனர். இந்த உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டவர்களுடன் தூதுவர் மிசுகொஷி மற்றும் அவரின் பாரியார் மிசுகொஷி மரிகோ ஆகியோர் உரையாடியதுடன், பொருளாதார நெருக்கடியால் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கேட்டறிந்தனர். இந்த நிகழ்வின் போது, இலங்கையின் உண்மையான நட்பு நாடு எனும் வகையில், ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்க தமது அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளதை தூதுவர் வெளிப்படுத்தியிருந்தார்.
 

 

இந்த உணவுப் பொதி விநியோகத் திட்டம், ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மனித நேய உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஏழு தசாப்த காலப்பகுதியில், இலங்கையில் சமாதானம் மற்றும் சமூகப்பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஜப்பான் பெருமளவு உதவிகளை வழங்கி வருவதுடன், இவற்றில் வாழ்வாதார மேம்படுத்தல் மற்றும் மக்களுக்கான வலுவூட்டல் நடவடிக்கைகளும் அடங்கியுள்ளன. இந்த ஆண்டில் மாத்திரம், 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நன்கொடை உதவிகளை உடனடி, மத்திய கால மற்றும் நீண்ட கால அடிப்படையிலான உதவிச் செயற்பாடுகளினூடாக வழங்கியுள்ளது. இதனூடாக, அவசரச் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், எதிர்கால வளர்ச்சிக்காக திறன்களைக் கட்டியெழுப்புவது குறித்தும் கவனம் செலுத்தியிருந்தது.