இலங்கை, ஜப்பான் மற்றும் ஐ.நா பெண்கள் அமைப்பின் ஆதரவுடன் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதலாவது தேசிய செயற்திட்டத்தை பின்பற்றுவதை நோக்கி நகர்கின்றது
2022/12/6

கொழும்பு, இலங்கை (6 டிசம்பர் 2022) - இன்று காலை, இலங்கைக்கான ஜப்பான் தூதுவரான H.E. மிசுகோஷி ஹிடியாகி, மற்றும் இலங்கையில் உள்ள ஐ.நா பெண்கள் அமைப்பின் தலைவரான ரமாயா சல்காடோ ஆகியோர், பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் முதலாவது தேசிய செயற் திட்டத்தை (WPS) பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரான கௌரவ. கீதா சமன்மாலி குமாரசிங்க அவர்களிடம் கையளித்தனர்.
"இந்த செயற் திட்டம் மோதல்கள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலக்கு ஆதரவை வழங்குவதற்கான தெளிவான பாதையை வழங்குகின்றது. அதன் பின்பற்றுகையானது மீட்புப் பணிகளில் எந்தவொரு பெண்ணோ அல்லது பெண்பிள்ளையோ பின்தள்ளியிருக்கவில்லை என்பதை உறுதிசெய்வதில் ஒரு முக்கியமான முன்னோக்கிய படியாகும்” என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரான கௌரவ. கீதா சமன்மாலி குமாரசிங்க அவர்கள் தெரிவித்தார்.
பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை தீர்மானம் 1325 அதன் இருபத்தி இரண்டாம் ஆண்டில் கால் பதிக்கும்போது, இலங்கையில் ஜப்பான், பெண்கள் குழுக்கள் மற்றும் சிவில் சமூகம் உட்பட G7 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து விருத்தசெய்யப்பட்ட தேசிய செயற்திட்டங்களை உருவாக்கி அமுலாக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், உலக அளவிலும் பிராந்திய அளவிலும் அதன் பரவுகை கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இலங்கையின் சொந்த தேசிய செயற்திட்டம் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ள நிலையில், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மீட்பு முயற்சிகளில் பெண்களின் அதிகரித்த பங்கேற்பிற்கு அழைப்பு விடுக்கும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைய தயாராக உள்ளது.
இதனை வலியுறுத்தி, இலங்கை ஐ.நா பெண்கள் அமைப்பின் தலைவரான ரமாயா சல்காடோ, "பெண்களுக்கு சமமான இடமளிக்கும் போது, அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் தீர்மானங்களில் அவர்களின் குரல்கள் உள்ளடங்கியிருக்கும் போது மட்டுமே சமாதானமும் அபிவிருத்தியும் நிலைத்திருக்கும்" என்று குறிப்பிட்டார்.
தேசிய செயற்திட்டம் 25 மாவட்டங்களிலும் மோதல்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள், உள்ளூர் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் ஆர்வலர்களுடன் கலந்தாலோசித்ததன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிப்புடன் 'இலங்கையில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துதல்' என்ற தலைப்பில் ஜப்பான் அரசாங்கம், இலங்கை அரசாங்கம் மற்றும் ஐ.நா பெண்கள் அமைப்பிற்கிடையிலான 3 வருட கூட்டு பங்காண்மையின் ஒரு பகுதியாக ஐ.நா பெண்கள் அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.
ஜப்பானின் தூதுவரான H.E. மிசுகோஷி; "ஜப்பான் அரசாங்கம் இந்த தேசிய செயற்திட்டத்தை அமைச்சரவை சரியான நேரத்தில் ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதுடன் இலங்கையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டலுக்கான செயன்முறை நடவடிக்கைகளை உறுதிசெய்யும் வகையில் அமுலாக்கப்படும் என நம்புகிறது" என வலியுறுத்தினார்.
தேசிய செயற்திட்டமானது இலங்கை நெருக்கடி மற்றும் அதன் சவால்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதற்கு மிகவும் பொருத்தமானது என்பதால் அதன் பின்பற்றுகையானது இலங்கையில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கியமான கட்டமைப்பை வழங்கும்.