நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் Bon Odori திருவிழா

2022/12/14

சுமார் ஐந்தாண்டுகள் இடம்பெறாமலிருந்த ‘Bon Odori’ திருவிழா, இம்முறை மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 10 ஆம் திகதி மஹாரகம தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தில் (NYSC), ஜப்பானின் சொலிடாரிட்டி சம்மேளனம் இணைந்து, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

Bon Odori’ என்பது ஜப்பானிய பாரம்பரிய திருவிழாவாக அமைந்திருப்பதுடன், தமது முன்னோர்களின் ஆன்மாக்களை மீண்டும் வரவேற்று வழியனுப்பும் நம்பிக்கையுடன் வருடத்தில் ஒரு முறை கொண்டாடப்படுகின்றது. ஜப்பானிய வரலாற்றில் முக்கிய அங்கமாக இது கொண்டாடப்படுகின்றது.
 

இந்த ஆண்டின் ‘Bon Odori’ நடனத்தை கொழும்பிலுள்ள ஜப்பானிய பாடசாலை மற்றும் Lanka Nippon BizTech Institute (LNBTI) இன் மாணவர்கள் வெளிப்படுத்தியிருந்ததுடன், இதனைத் தொடர்ந்து, நடனம் மற்றும் ஜப்பானிய ட்ரம் கலை நிகழ்ச்சியை ஜப்பானிய பாடசாலை மாணவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கராதே நிகழ்வு, நடனம் மற்றும் ட்ரம் நிகழ்வு போன்றனவும் இடம்பெற்றன. ஜப்பானின் பாரம்பரிய இசைக் கலைஞர்களான நமி மகியொக மற்றும் மொமொகோ இபுசுகி ஆகியோரும் ஜப்பானிலிருந்து வருகை தந்து இந்த நிகழ்வில் நேரடியாக இணைந்து கொண்டனர்.


இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, NYSC தவிசாளர் கலாநிதி. திரான் டி சில்வா மற்றும் LNBTI தலைவர் பேராசிரியர் ஆனந்த குமார மற்றும் பல இதர பங்குபற்றுநர்களும் நிகழ்வில் இணைந்து கொண்டனர். பார்வையாளர்கள் நாட்டிய நிகழ்வுகளை கண்டு களித்ததுடன், ஜப்பானிய உணவு வகைகளையும் அருந்தி மகிழ்ந்தனர். Nihonbashi, Ginza Hohsen, Kuuraku, The Sushi Bar Samurai, Ichi-zen மற்றும் NYSC சமையல் வகுப்பு ஆகியவற்றினால் ஜப்பானிய உணவுகள் பரிமாறப்பட்டன.
 

இந்த ஆண்டின் ‘Bon Odori’ திருவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது, குறிப்பாக NYSC வளாகத்தில் இடம்பெற்றது. இந்த வளாகம் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிகழ்வை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஒளிப்பதிவு செய்திருந்ததுடன், டிசம்பர் 11ஆம் திகதி விசேட நிகழ்ச்சியையும் ஒளிபரப்பியிருந்தது.
 
ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான இணையத்தளம்:

https://m.youtube.com/watch?v=84X9jtPNV4U