ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி திருகோணமலை மற்றும் பொலன்நறுவைக்கு விஜயம்

2023/2/18
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, 2023 பெப்ரவரி 15 முதல் 18 ஆம் திகதி வரையில் திருகோணமலை மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த இரு மாவட்டங்களுக்கும் இவரின் முதலாவது பயணம் இதுவாக அமைந்திருந்தது.
 
தூதுவர் திருகோணமலை விஜயத்தின் போது, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத், ரியர் அட்மிரல் தம்மிக குமார மற்றும் பிரதேசத்தின் வணிகர் கழக அங்கத்தவர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் போன்ற இதர முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். புதுப்பிக்கத்தக்க வலு, உற்பத்தி மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் திருகோணமலையில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் பற்றி ஆளுநர் யஹம்பத்துடன் தூதுவர் கலந்துரையாடினார். ரியர் அட்மிரல் குமாரவுடனான சந்திப்பின் போது, ஜப்பானிய கடல்சார் சுயப் பாதுகாப்பு செயலணி மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றுக்கிடையே எதிர்காலத்தில் கைகோர்த்த செயற்பாடுகளுக்கான வாய்ப்புகள் தொடர்பில் பேசப்பட்டிருந்தது.
 

திருகோணமலையில் தங்கியிருந்த போது, ஜப்பானின் Peace Winds அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருநு்த சேதன விழிப்புணர்வு அமர்வில் தூதுவர் மிசுகொஷி கலந்து கொண்டார். இதன் போது, அப்பிரதேசத்தில் சேதன விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், நாட்டில் சேதன விவசாயத்தை ஊக்குவிப்பது, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDG) எய்துவதற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை உறுதி செய்திருந்தார்.


பெப்ரவரி 17 ஆம் திகதி, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஜப்பானிய அரசாங்கத்தின் ரூ. 2.63 பில்லியன் பெறுமதியான உதவியில் நிறுவப்பட்ட இரவு நேர திசைகாட்டிக் கட்டமைப்பைக் கையளிக்கும் நிகழ்வில் தூதுவர் மிசுகொஷி பங்கேற்றிருந்தார். மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு சரக்குக் கையாளல் மற்றும் இலங்கையை சர்வதேசத்துடன் இணைப்பது போன்றவற்றினூடாக பொருளாதார வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கு உதவியாக அமைந்திருக்கும் என தமது வாழ்த்துகளை தூதுவர் தெரிவித்தார். மேலும், இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையே பரஸ்பர உறவுகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு இது உதவியாக அமைந்திருக்கும் என தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார். துறைமுகங்கள், கப்பற் போக்குவரத்து மற்றும் ஆகாயப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுடன் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.


பொலன்நறுவைக்கான தமது விஜயத்தின் போது, நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய அம்சங்களைப் பார்வையிட்டார். இவருடன், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் இணைந்து கொண்டார். யுனெஸ்கோ உலக பாரம்பரிய பகுதிக்கான விஜயத்தின் போது, பெரும்பாலான தொல்பொருள் அம்சங்களை பேணுகின்றமைக்காக தூதுவர் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இலங்கையின் வரலாறு பற்றி மேலதிக தகவல்களையும் அறிந்து கொண்டார். மாதுரு ஓயா தேசிய பூங்காவும் தூதுவர் விஜயம் செய்திருந்ததுடன், இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பில் விளக்கங்களையும் பெற்றுக் கொண்டார்.