2022 ஆம் ஆண்டின் 104 மில்லியன் மானிய உதவித் திட்டத்தின் கீழ் பொது வைத்தியசாலைகளுக்கு டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதநேய உதவியாக ஜப்பான் வழங்கியுள்ளது

2023/2/22

இலங்கையின் பொது வைத்தியசாலைகளுக்கு டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதநேய மானிய உதவியாக வழங்குவதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி கைச்சாத்திட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை அரசாங்கம் சார்பாக திறைசேரி, நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன கைச்சாத்திட்டார். இந்நிகழ்வு பெப்ரவரி 23 ஆம் திகதி இடம்பெற்றது.
 
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக எழுந்துள்ள எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையினால், நாடு முழுவதிலுமுள்ள 1,180 பொது வைத்தியசாலைகளுக்கு, மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதிகளில் மருத்துவ சேவைகளையும் அத்தியாவசியமற்ற மருத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளன. நோயாளர் காவு வண்டிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லும் வண்டிகள், அவசர நோயாளர்களை கொண்டு செல்லும் வண்டிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சாதனங்கள் பயணிக்கும் வாகனங்கள் போன்றனவும் இந்த எரிபொருள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்த மனிதநேய உதவித் திட்டத்தினூடாக இலங்கைக்கு உதவும் வகையில் 20 மில்லியன் லீற்றர் டீசலை வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. அதனூடாக, பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் நிலைபேறான மருத்துவ சேவைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும்.
 
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி சந்திப்பொன்றை மேற்கொண்டார். அதன் போது, இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்கும், ஜப்பானிய தனது ஆதரவை வழங்க அர்ப்பணித்துள்ளமையை தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவியை வழங்கியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டிருந்ததுடன், அதில் 77.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மனிதநேய உதவிக்காக வழங்கப்பட்டிருந்தது. இதில் 46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எரிபொருள் உதவியாக அமைந்திருந்தது. வரலாற்றில், இலங்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ள அதியுயர் மானியத் தொகையாக இது அமைந்திருப்பதுடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஜப்பானின் உறுதியான அர்ப்பணிப்பின் அடையாளமாக இது அமைந்துள்ளது.