இலங்கை பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதலாவது தேசிய செயற்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது
2023/3/9

09 மார்ச் 2023, கொழும்பு: இலங்கை ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஐ. நா பெண்கள் அமைப்பின் ஆதரவுடன் 2023 - 2027 காலப்பகுதிக்கான பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதனுடைய முதலாவது தேசிய செயற்திட்டத்தை (WPS) ஏற்றுக்கொண்டது. இந்தத் திட்டமானது ஐ.நா பாதுகாப்பு பேரவையின் தீர்மானம் 1325 (2000) இல் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச அர்ப்பணிப்புகளுக்கு இணங்க பெண்களைப் பாதுகாப்பதற்கும் வலுவூட்டுவதற்குமாக நாட்டின் சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பில் உள்ளடக்கப்படுகின்றது. இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு இன்றியமையாத பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரல்களின் பங்குதாரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் இது நோக்காக கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் 2023 பெப்ரவரி 27 அன்று இலங்கையின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் சர்வதேச மகளிர் தினமான 2023 மார்ச் 8 அன்று சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய செயற்திட்டம், மாகாண மற்றும் மாவட்ட அளவிலான அரச துறை உத்தியோகத்தர்கள், சிவில் சமூகம், சமூக மட்ட அமைப்புகள், பெண் தலைவர்கள் மற்றும் மோதல்கள் மற்றும் நெருக்கடிகளின் நேரடியான மற்றும் பலதரப்பட்ட அனுபவங்களைக் கொண்டவர்களின் உள்ளீட்டைக் கொண்டு கலந்தாலோசனை செயன்முறை மூலமாக உருவாக்கப்பட்டது. இது ஜப்பான் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டு பங்காண்மையின் ஒரு பகுதியாக ஐ.நா பெண்கள் அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. 2018 இல், ஜப்பான் அரசாங்கம் G7 WPS கட்டமைப்பின் கீழ் இலங்கையுடன் ஒரு பங்காண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இது தொடர்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் நிலை திருப்திகரமாக இல்லையென்றாலும், பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பெண்கள் முன்னிலையில் உள்ளதாகவும், அவர்களின் உரிமைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்தார். 'பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கை' மற்றும் 'பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய செயற்திட்டம்' ஆகியவை இந்த இலக்கை அடைய உதவும் என்றும், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் சர்வதேச மகளிர் தினத்தில் வெளிப்படுத்தப்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார். “நிறுவன கட்டமைப்பிற்குள் பெண்களின் உரிமைகளைச் உள்ளடக்குவதை பரப்புரையாற்றுவதற்காக சார்க் நாடுகளிலிருந்து முன்னணி பெண் செயற்பாட்டாளர்களின் கூட்டத்தை இலங்கை இந்த ஆண்டு நடாத்தவுள்ளது. அனைத்து துறைகளிலும் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் ஆகியவற்றை அடைவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் தலைமைத்துவ வகிபாகத்தை வகிக்கும்” என்றார்.
தேசிய செயற்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ. கீதா சமன்மாலி குமாரசிங்க கூறியதாவது: இந்த செயற்திட்டத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை கட்டமைப்புடன் இலங்கை முதன்முறையாக ஏற்புடையதாக்கப்பட்டுள்ளதுடன் இது நிர்வாகம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் செயன்முறைகளில் பெண்களின் அதிகரித்த பங்கேற்பையும், பிரதிநிதித்துவத்திற்கு அழைப்பு விடுக்கும்” என்றார்.
தேசிய செயற்திட்டம் மோதல்கள், வன்முறை மற்றும் காலநிலை பாதுகாப்பின்மை ஆகியவற்றால் நேரடியாக பாதிக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்குவதை மேலும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலதிகமாக, இது ஓரங்கட்டப்பட்ட பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், சமமான வாய்ப்புகள் மற்றும் வளங்களை அணுகுவதன் மூலம் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையின் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் H.E. MIZUKOSHI Hideaki, “இந்த தேசிய செயற்திட்டத்தை சரியான நேரத்தில் ஏற்றுக்கொண்டதை ஜப்பான் அரசாங்கம் வரவேற்பதுடன், இது நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்புகளுக்கு உதவும். ஐ.நா பெண்கள் அமைப்பு மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடனான எங்களின் நீண்டகால பங்காண்மையின் மூலம், இலங்கையில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க ஜப்பான் உறுதிபூண்டுள்ளது” என்றார்.
ஐ. நா பெண்கள் அமைப்பின் இலங்கை அலுவலக தலைவரான பிரஷானி டயஸ் கூறியதாவது: "இந்த முக்கியமான கொள்கைக் கட்டமைப்பை அமுலாக்க உதவுவதற்காக, ஐ.நா. பெண்கள் அமைப்பு, ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன், அரச துறை உத்தியோகத்தர்களுக்கு பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், நெருக்கடியான காலங்களில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளின் நல்வாழ்வைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட அளவில் செயற்பாட்டுத் திட்டங்கள் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளன”.
இந்த முயற்சிகள் தவிர, ஐ. நா பெண்கள் அமைப்பு தொழில்முனைவோருக்கான பயிற்சிகளின் மூலமாக பெண்களின் பொருளாதார வலுவூட்டலை வலுப்படுத்தியதுடன், பெண்களின் வேலை வாய்ப்பு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர்ந்து, இளையவர்கள் உட்பட பெண் தலைவர்களுக்கு அவர்களின் சமூகங்களில் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான திறன்களை வழங்கியுள்ளது.
பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டத்தை ஏற்றுக்கொண்டமையானது, பால்நிலை-பதிலளிப்பு மோதல்கள் மற்றும் நெருக்கடிக்கான பதிலளிப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கின்ற அதே சமயம் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மோதல்களைத் தடுக்கும் தலைமைத்துவத்தில் பெண்களின் வகிபாகத்தை வலுப்படுத்துகின்றது.