பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியத்திற்கு உதவுவதற்காக UNFPA மேற்கொள்ளவிருக்கும் திட்டத்திற்கு 4.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஜப்பான் வழங்குகின்றது

2023/4/20
கொழும்பு, இலங்கை- ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் - இலங்கை (UNFPA Sri Lanka) "ENSURE" என்ற பெயரில் ஒரு புதிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. உயிர்காக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய வசதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துதல், பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல், பெண்கள். சிறுமிகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான உதவிச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இத் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் நிதியுதவியை வழங்குகின்றது. 4.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இத் திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் தற்போதய நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள பிரிவினருக்காக நடமாடும் சிகிச்சை நிலையச் சேவை வழங்கப்படுவதுடன், சுகாதார உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களும் வழங்கப்படும்.
 
இச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, UNFPA அமைப்பும் ஜப்பானிய அரசாங்கமும் இலங்கையின் சுகாதார அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, அரசாங்க மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் என்பவற்றுடன் நெருங்கிய முறையில் இணைந்து செயற்பட இருக்கின்றன. 3 மில்லியன் பெண்கள். சிறுமிகள் மற்றும் இளவயதினரைக் காப்பாற்றுவதற்காக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் உள்ளடங்கலாக ஐந்து மாகாணங்களிலுள்ள ஏழு மாவட்டங்களில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், மாவட்ட ரீதியான வறுமை வீதம் மற்றும் வாழ்கைத்துணையினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் வீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்படி மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. பொருளாதாரச் சீர்குலைவு மற்றும் நீடித்து நிலவும் சமூக பொருளாதார நெருக்கடி ஆகியவற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதே இச் செயற்றிட்டத்தின் குறிக்கோளாகும்.
 
இலங்கைக்கான ஐப்பானியத் தூதுவர் மேன்மைதங்கிய மிககொஷி ஹிதேகி இச் செயற்றிட்டம் பற்றிக் குறிப்பிடுகையில், விசேடமாக கிராமப்புறங்களின் வறிய சமூகங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பொருள்களின் விலையேற்றம், வருமான வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக இச் சமூகங்களில் வாழ்பவர்கள் முறையான சுகாதார சேவைகளைப் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்ட தூதுவர் மிசுகொஷ், இலங்கையின் ஓர் உற்ற நண்பன் என்ற முறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் 'பாதுகாப்பிற்குத் தொடர்ச்சியாக உதவ ஜப்பான் தன்னை வலுவாக அர்ப்பணித்துள்ளது என்று தெரிவித்தார்.
 
2022ஆம் ஆண்டில், மனிதநேயத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் (UNFPA) திட்டம் 2022 மேற்கொண்ட மதிப்பீட்டின் பிரகாரம், இலங்கையிலுள்ள 5.7 மில்லியன் மக்களுக்கு உடனடி மனிதநேய உதவி தேவைப்படுகின்றது. 49 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் உணவுப் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளனர். வரி அதிகரிப்பின் விளைவாக, மாதவிலக்கு தொடர்பான சுகாதாரப் பொருட்களின் விலைகள் சென்ற வருட மார்ச் மாதத்திலிருந்து அபரிமிதமாக அதிகரித்துள்ளன. 10 சுகாதாரத் துவாய்கள் கொண்ட ஒரு பக்கெட்டின் விலை ரூ.300க்கு மேலாக அதிகரித்துள்ளதால். பெண்கள் தமது சுகநலத்தைத் தியாகம் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக தமது குடும்பத்தனருக்கு உணவளிப்பதற்காக இரண்டொரு கிலோ அரிசியைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவப் பராமரிப்புக்கான செலவின் அதிகரிப்பு, அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக, பெண்களும் சிறுமிகளும் அவசரமான மற்றும் உயிரைக் காக்கக்கூடிய அடிப்படை மற்றும் விரிவான மருத்துவப் பராமரிப்பைப் பெற முடியாதுள்ளனர்.
 
இச் செயற்றிட்டம் பற்றிக் கருத்து வெளியிட்ட UNFPAஇன் இலங்கைக்கான பிரதிநிதி திரு குன்லே அதெனியி, “பெண்கள் மற்றும் சிறுமிகளில் மறைந்திருக்கும் ஆற்றலை அடையாளம் காணியதும் அவர்கள் அதனை வெளிக்காட்ட உதவுவதும் முக்கியமாகும். பெண்கள், இளவயதினர் மற்றும் விசேட தேவையுள்ளோர் உயிர்காக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய சேவைகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு ENSURE​ முன்னெடுப்பின் ஊடாக UNFPAயும் ஜப்பானிய அரசாங்கமும் தம்மை அர்ப்பணித்துள்ளன. பாதுகாப்பான தங்குமிட சேவைகளை ஆதரிப்பதுடன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருள்களை வழங்குவதன் மூலம் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் சுகாதார மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பைப் பலப்படுத்தி பாலியல் அடிப்படையிலான வன்முறைப் பிரச்சினைக்குத் தீவு காண்பதற்கும் பெண்களின் பாதுகாப்பான மகப்பேற்றை உறுதிசெய்வதற்கும் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இந்த முயற்சியைத் தொடங்கும் நாம் எமது சகல பங்காளிகளுடனும் இணைந்து செயற்பட ஆவலாயிருக்கின்றோம்" என்று கூறினார்.