இலங்கையின் உலர் மற்றும் இடைவெப்ப வலயங்களில் நெல் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பினூடாக (FAO) ஜப்பான் அரசாங்கம் 4.6 மில்லியன் டொலர் நிதியுதவி.

2023/5/16
கொழும்பு 2023 மே 16,இலங்கையின் உலர் மற்றும் இடைவெப்ப வலயங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள சிறு நெல் விவசாயிகளின் உற்பத்தித் திறனை வலுவூட்டுவதற்கு 4,629,629 அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினூடாக (FAO) ஜப்பான் அரசாங்கம் வழங்கி வருகிறது.

சிறிய அளவில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் பிரதானமாக தமது சுய பயன்பாட்டுக்காக விளைச்சலைப் பயன்படுத்துவதோடு, அவர்களே பாதிக்கப்படக்கூடிய சமூகமாகவும் உள்ளனர். இரு காலங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட உரத் தட்டுப்பாடு காரணமாக அறுவடை வீழ்ச்சியடைந்தமையால், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான தேவைப்பாடுகளை அடைந்து கொள்வதற்கு சில விவசாயிகள் எதிர் விளைவுடைய கையாளல் மூலோபாயங்களைக் (அடகு வைத்தல்> கடனுக்கு வாங்குதல், சேமிப்பிலிருந்து மீளப் பணம் பெற வேண்டி ஏற்படுதல்) கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டனர். 

இந்த முன்னெடுப்பின் மூலமாக, உலர் மற்றும் இடை வலயங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் காணப்படக்கூடிய ஒரு ஏக்கர் வரையான நிலப்பகுதியில் பயிர்செய்யும் சுமார் 250000 சிறிய அளவில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் யூரியா உரம் எதிர்வரவிருக்கும் சிறு போக மற்றும் பெரும் போக பயிர்ச் செய்கைக் காலத்துக்கென வழங்கப்படவுள்ளது. இவ் உர வகை இலவசமாக வழங்கப்படும் என்பதுடன், விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆதரவுடன் விநியோகிக்கப்படும். உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு உரத்தின் வினைத்திறனுடைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வூட்டல்களையும் சிறு நெல் விவசாயிகளுக்கு இச்செயற்றிட்டம் வழங்கும்.

“அந்நியச் செலாவணியில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக உரத்தைப் பெற்றுக்கொள்ள மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதை நாம் அறியத்தருவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இவ் ஆதரவானது, சிறு விவசாயிகளுக்கான சிறந்த வாழ்வாதாரத்தையும், நாடு பூராகவும் உள்ள அனைத்துப் பிரஜைகளுக்குமான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிலையான அணுகலை உறுதிப்படுத்தி, உணவு உற்பத்தியை நெருக்கடிக்கு முன்பிருந்த மட்டத்திற்கே மேம்படுத்தும் என நாம் எதிர்பார்க்கிறோம்.” என இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் எச்.ஈ. மிசுகோஷி ஹிடியகி தெரிவித்தார்.

இந்த முன்னெடுப்பு குறித்து, உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி விமலேந்திர சரன் கருத்துத் தெரிவிக்கையில், “உணவு மற்றும் விவசாய அமைப்பாக (FAO), பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளும், மீனவர்களும் தமது வாழ்வாதாரங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாம் பணியாற்றி வருவதுடன், அனைத்து மட்டங்களிலும் அதற்காக ஆதரவளித்தும் வருகிறோம். இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் நிலை தற்போது நம்பிக்கையூட்டும் விதமாக இருக்கின்ற போதிலும், முழுமையாக மீண்டெழுவதற்கு இன்னும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்செய்கைக் காலங்கள் தேவைப்படலாம். இலங்கையின் மீட்சிக்கு உதவும் ஜப்பான் அரசாங்கத்திற்கு நாம் நன்றி நவில்கிறோம், அத்தோடு 2023ஆம் ஆண்டுக்கான உற்பத்தியை ஊக்குவிப்பதில் வழங்கப்படும் ஆதரவு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்முனை அளவு சந்தேகமும் இல்லை.” எனக் கூறினார்.

உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), அதன் பங்குதாரர்களுடன் இணைந்து, நகர்ப்புற அமைப்புகள் உள்ளடங்களாக, விவசாயத்தை ஊக்குவிப்பதுடன் மிகவும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும், துரித உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இலங்கையிலுள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது.