ஜப்பான் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்களிடையிலான சந்திப்பு

2023/7/29

 
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜப்பானிய வெளியுறவுகள் அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா, இலங்கையின் வெளியுறவுகள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியுடன் ஜுலை 29ஆம் திகதி மு.ப. 11 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலமும் ஐம்பது நிமிடங்களும் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின் போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியிருந்தனர்.
 

1. இரு நாடுகளுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் பூர்த்தியடைந்திருந்த நிலையில், இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையிலான பிரதிநிதிகள் பரிமாற்றம் அதிகரித்திருந்தமையை அமைச்சர் ஹயாஷி வரவேற்றிருந்தார். குறிப்பாக, ஜனாதிபதி விக்ரமசிங்க இரு தடவைகள் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தமையையும் விசேடமாக குறிப்பிட்டிருந்தார். இந்து சமுத்திரத்தில் கேந்திய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை காணப்படுவதுடன், "Free and Open Indo-Pacific (FOIP)" இல் இலங்கை பங்கேற்பதன் முக்கியத்துவம் பற்றியும் அமைச்சர் ஹயாஷி குறிப்பிட்டிருந்தார்.

2. G7 ஹிரோஷிமா மாநாட்டின் தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சர் ஹயாஷி விளக்கமளித்ததுடன், இதில் சட்ட விதிமுறைகளின் பிரகாரம் சுதந்திரமான மற்றும் திறந்த சர்வதேச ஆணையை பேணுவது மற்றும் வலிமைப்படுத்துவது மற்றும் "Free and Open Indo-Pacific (FOIP)" க்கான புதிய திட்டம் பற்றியும் விளக்கமளித்திருந்தார். ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை தலைமைத்துவம் வகிக்கவுள்ள இந்து சமுத்திர ரிம் சம்மேளனத்துக்கு ஜப்பான் முக்கியத்துவம் வழங்கி ஆதரவளிக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். IORA தலைமை வகிக்கும் நாடு எனும் வகையில் ஜப்பானின் ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாக அமைச்சர் சப்ரி குறிப்பிட்டிருந்தார்.

3. சகல கடன் வழங்கிய நாடுகளையும் ஈடுபடுத்திய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முக்கியத்துவத்தை இரு தரப்பும் உறுதி செய்திருந்ததுடன், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறைகளில் மேலும் முன்னேற்றத்தையும் எதிர்பார்ப்பதையும் வெளிப்படுத்தியிருந்தனர். வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பு செயன்முறையை முன்னெடுக்க இலங்கை தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும், இந்த கலந்துரையாடல்களில் ஜப்பான் வழங்கியிருந்த ஆதரவுக்கு நன்றியையும் வெளியுறவுகள் அமைச்சர் சப்ரி தெரிவித்திருந்தார்.
 

4. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் பிரகாரம் கொள்கை தீர்மானமெடுத்தல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் மோசடி தவிர்ப்பு ஏற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் இலங்கை காண்பிக்கும் முன்னேற்றங்களை அமைச்சர் ஹயாஷி வரவேற்றிருந்தார். மீண்டும் இலங்கை அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை விரைவில் ஆரம்பிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். தேசிய ஒருமைப்பாடு தொடர்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் மற்றும் உண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆணைக்குழுவை நிறுவுவது போன்ற நடவடிக்கைகளை வரவேற்றதுடன், இவற்றுக்கு ஜப்பானின் ஆதரவையும் அமைச்சர் சப்ரியிடம் வெளிப்படுத்தியிருந்தார். ஜப்பானின் ஆதரவுக்கு அமைச்சர் சப்ரி நன்றி தெரிவித்தார்.

5. அணுஆயுத களைவு மற்றும் பெருக்கத்தை கட்டுப்பது்தல் தொடர்பான சர்வதேச பிரச்சனைகள் தொடர்பிலும் இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறியிருந்தனர். CTBT தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடுகளை அமைச்சர் ஹயாஷி பெரிதும் வரவேற்றிருந்தார்.

6. ALPS வடிகட்டிய நீர் தொடர்பில் ஜப்பானின் நிலைப்பாட்டை அமைச்சர் ஹயாஷி வெளிப்படுத்தியதுடன், IAEA இல் இலங்கையும் அங்கம் வகிப்பதாக அமைச்சர் சப்ரி குறிப்பிட்டார். அத்துடன், IAEA செயன்முறைகளில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

7. உக்ரேன் மற்றும் கிழக்கு ஆசியா அடங்கலாக பிராந்திய சூழ்நிலை தொடர்பில் இரு அமைச்சர்களும் வெளிப்படையான உரையாடல்களை மேற்கொண்டனர். உக்ரேனிலிருந்து கருங்கடல் ஊடாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்வதற்கு வழிகோலிய Black Sea Grain Initiative (BSGI) முயற்சி தொடர்பில் அமைச்சர் ஹயாஷி குறிப்பிட்டதுடன், இந்தத் திட்டத்தை ரஷ்யா இடைநிறுத்தியிருந்தமையானது, உணவு பாதுகாப்பு இன்மை தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்திருப்பதாகவும், வருத்தத்திற்குரிய இந்த நடவடிக்கை தொடர்பில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஹயாஷி குறிப்பிட்டார்.