குறுநில விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 8,360 மெட்ரிக் டொன் உரத்தை FAO விநியோகிக்கிறது

2023/8/7

2023 ஆகஸ்ட் 7, கொழும்பு: எதிர்வரும் பெரும்போக நெற்பயிர்ச் செய்கைக் காலத்தில் பகிர்ந்தளிப்பதற்காக 8,360 மெட்ரிக் டொன் யூரியா உரம், உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) விவசாய அமைச்சுக்கு இவ்வாரம் வழங்கி வைக்கப்பட்டது. ஜப்பான் அரசாங்கத்தின் தாராள் நன்கொடையினூடாக இது சாத்தியமாகியது. இந்த உரத் தொகை, இலங்கையின் உலர் மற்றும் இடைவெப்ப வலயங்களில் காணப்படும் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 228,000 குறுநில விவசாயிகளுக்கு மத்தியில், உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டிலுள்ள குறுநில விவசாயிகளின் நெகிழ்வுறுதியை அதிகரிப்பதற்காகவும் பகிர்ந்தளிக்கப்படும்.

குருநாகல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு ஹெக்டெயர் வரையான நிலப்பரப்பில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் குறுநில விவசாயிகளை இலக்குவைத்து நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த உடனடி உதவித் திட்டத்தின் கீழ். 0.5 ஹெக்டெயர் வரையிலான நிலப்பரப்பில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக 25 கிலோ கிராம் யூரியா உரம் வழங்கப்படும் என்பதுடன், 1 ஹெக்டெயர் வரையிலான நிலப்பரப்பில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும்.


இலங்கையின் கமத்தொழில் அமைச்சரான மஹிந்த அமரவீர அவர்கள் நாட்டின் விவசாயத்துறை இலக்குகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் இத்தகைய ஆதரவளிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, "இந்த யூரியா உரங்கள் கிடைக்கப்பெறுவது இலங்கையின் நிலையான மீட்சிக்கு வழிவகுக்கும். எமது விவசாயிகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதனூடாக, ஒரு வளமான மற்றும் நெகிழ்வுறுதி மிக்க விவசாயத்துறையின் வளர்ச்சியை நாம் ஊக்குவிக்கிறோம். இலங்கையின் குறுநில விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய இந்தப் பெறுமதி மிக்க உதவிக்கு நான் ஜப்பானிய அரசாங்கத்திற்கும், ஜப்பானிய மக்களுக்கும் நன்றி செலுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டார்.


ஜப்பானியத் தூதுவரான அதிமேதகு மிஸுகோஷி ஹிதெயாகி அவர்கள் இலங்கையின் விவசாயத்துறைக்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதுடன், "இலங்கை அரசாங்கம் மற்றும் FAOவின் கூட்டிணைந்த முயற்சியின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நிலைபேறான நடைமுறைகளினூடாக குறுநில விவசாயிகளுக்கு வலுவூட்டும் எமது பகிரப்பட்ட குறிக்கோள் இந்த முன்னெடுப்புடன் நன்றாகப் பொருந்திப் போகின்றன. இவ்வுதவி இலங்கையின் விவசாய சமூகங்களின் முன்னேற்றத்திற்குக் கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனவும் கருத்துரைத்தார்.


இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான FAOவின் பிரதிநிதியான திரு. விம்லேந்திர ஷரண் அவர்கள், நிலைபேறான விவசாயத்தை நோக்கிய நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் கோடிட்டுக் காட்டிய அதே வேளை, இலங்கை விவசாயச் சமூகங்களுக்கு உதவி செய்வதன் அர்ப்பணிப்பையும் குறித்துக்காட்டி, "நிலைபேறான உ நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்குமான அதன் குறிக்கோளில் FAO உறுதியாக உள்ளது. குறுநில விவசாயிகள் முகங்கொடுக்கும் சவால்களை நிவர்த்திப்பதற்கு நாடுகள் ஒன்றிணையும்போது நேர்மறையான விளைவுகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை ஜப்பானிய அரசாங்கம் மற்றும் கமத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் கூட்டிணைவு எடுத்துக்காட்டுகிறது" எனவும் குறிப்பிட்டார்.
 

FAO அதன் மதிப்பிற்குரிய பங்காளர்களுடன் இணைந்து, இலங்கையில் விவசாயத்துறையை ஆதரிப்பதற்கான அர்ப்பணிப்பையும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை முன்னோக்கிக் கொண்டு செல்வதிலும் நெகிழ்வுறுதியுடன் கூடிய விவசாய-உணவுக் செயற்படுவதையும் மீண்டும் வலியுறுத்துகிறது.