மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் ஜப்பானிய நன்கொடைத் திட்டத்துக்கு (JDS) உறுதியான அர்ப்பணிப்பை ஜப்பானிய தூதரகம் மீள உறுதி செய்தது

2023/8/8
மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் ஜப்பானிய நன்கொடைத் திட்டத்தின் (JDS) கீழ் ஜப்பானில் புலமைப்பரிசில் பெற்று பயணமாகும் 17 புதிய JDS அங்கத்தவர்களை வழியனுப்பும் நிகழ்வை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தார்.


மனித வளங்கள் அபிவிருத்தியினூடாக நாட்டின் உயர் தரமான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி (ODA) நிகழ்ச்சிகளில் ஒன்றாக JDS திட்டம் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்க தயார்ப்படுத்தப்படும், இளம் நிர்வாக அதிகாரிகளை, சர்வதேச மாணவர்களாக ஜப்பானிய பட்டப்படிப்பு பாடசாலைகளில் இணைந்து கொள்வதனூடாக, ஜப்பானில் அவர்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்களைக் கொண்டு, தமது நாட்டுக்கு மீளத் திரும்பிய பின்னர், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பது இந்தத் திட்டத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
 
ஜப்பானுடன் மேலும் பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு உறுதியான அடித்தளங்களை ஏற்படுத்தவும் JDS அங்கத்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதுடன், ஜப்பானில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளும் கல்விசார் மற்றும் சமூக செயற்பாடுகளினூடாக கட்டியெழுப்பும் மனித வலையமைப்பைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்குமிடையே பிணைப்பை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
 
இந்தத் திட்டத்தின் கீழ், 17 பொது அதிகாரிகள் 2 முதல் 3 வருட கால மாஸ்டர் அல்லது PhD பட்டக் கற்கையை தொடர்வதற்கு இவ்வாண்டிலிருந்து அனுப்பப்படுவர். பொதுக் கொள்கை, பெரும்பொருளாதாரம், பொது நிதி மற்றும் முதலீட்டு முகாமைத்துவம், தொழிற்துறை அபிவிருத்திக் கொள்கை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நகர மற்றும் பிராந்திய அபிவிருத்தி போன்ற பிரிவுகளில் அவர்களின் பட்டப்படிப்புகள் அமைந்திருக்கும். 


2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதல், JDS திட்டத்தினூடாக இலங்கையின் 205 பொதுத் துறை அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களின் திறன்களைக் கட்டியெழுப்புவது மாத்திரமன்றி, இலங்கையின் நிறுவனசார் கொள்ளளவை மேம்படுத்தி, அதனூடாக தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு சிக்கல் நிலைகளிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதனூடாக எதிர்காலத்தில் சுபீட்சத்தை எய்தக்கூடியதாக இருக்கும்.


முன்னர் இந்தத் திட்டத்தினூடாக ஜப்பான் பயணமாகி மீண்டும் நாட்டுக்கு திரும்பியிருந்த 22 JDS அங்கத்தவர்கள், JDS பழைய அங்கத்தவர் சம்மேளனம் ஒன்றை நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், அவர்களின் பங்கேற்புடன், இந்த வழியனுப்பல் நிகழ்வு நடைபெற்றது. தற்போதைய சிக்கல் நிலைகள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு உதவுவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தும் வகையில், JDS அங்கத்தவர்களினால் பழைய அங்கத்தவர் ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து, ஜப்பானில் பெற்றுக் கொண்ட அறிவை பகிர்ந்து கொள்வதனூடாக, இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டார்.
 

சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டத்துக்கமைய, அரச உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனங்களின் வருமான மற்றும் செலவீன மறுசீரமைப்புகள், மோசடி தவிர்ப்பு போன்ற பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், அடுத்த ஆண்டுக்கான JDS நிகழ்ச்சித் திட்டத்துக்கான பரிமாற்ற ஆவணங்களில் கைச்சாத்திடும் நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் ஹயாஷியின் அழைப்பின் பேரில், பிரதமர் குணவர்தன பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வு ஜுலை 29 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது. இதனூடாக, JDS நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், 2023 ஆம் ஆண்டு, JDS நிகழ்ச்சித்திட்டத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தின் மறுபிறப்பும் ஆரம்பிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைந்திருக்கும்.