பேராசிரியர். ஆனந்த குமார வெளி விவகார அமைச்சரின் பாராட்டுதலைப் பெற்றார்

2023/9/15
Lanka Nippon BizTech Institute (LNBTI) இன் தலைவர்/உப வேந்தரான பேராசிரியர். ஆனந்த குமாரவுக்கு, வெளி விவகார அமைச்சரின் பாராட்டுதலை, செப்டெம்பர் 15ஆம் திகதி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி வழங்கியிருந்தார்.

 

சர்வதேச களங்களில் சிறந்த சாதனைகளைப் பதிவு செய்திருந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களை கௌரவிக்கும் வகையில் வெளி விவகார அமைச்சரின் பாராட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. அதனூடாக ஜப்பானுக்கும் இதர நாடுகள் மற்றும் பிரிவுகளுக்கிடையிலான நட்புறவை ஊக்குவிப்பதில் அவர்களின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளன. அந்த கௌரவிப்பைப் பெறுவோரின் செயற்பாடுகள் தொடர்பில் ஜப்பானிய பொது மக்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் ஊக்குவிப்பதும் இந்த பாராட்டுதல்களை வழங்குவதன் எதிர்பார்ப்பாகும்

இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவை கட்டியெழுப்புவதில் பேராசிரியர். ஆனந்த குமார பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளார். கல்வித் துறையில் ஜப்பானிய இளைஞர்களை சர்வதேச மட்டத்தில் செயலாற்றும் மனித வளங்களாக தயார்ப்படுத்துவதில் ஜப்பானின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முக்கிய பங்காற்றியிருந்தார். மேலும், அவர் LNBTI ஐ நிறுவியிருந்ததுடன், அதனூடாக தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தப்படுகின்றது. அக்கல்வியகத்தினூடாக தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்படுவது மாத்திரமன்றி ஜப்பானிய மொழி மற்றும் ஜப்பானிய வியாபார கலாசாரம் ஆகியனவும் கற்பிக்கப்படுவதால், ஜப்பானிய சமூகத்தில் பெருமளவு வரவேற்பு காணப்படுகின்றது. கல்வித் துறையில் மாத்திரம் பேராசிரியர் குமாரவின் முயற்சிகள் மட்டுப்படவில்லை. பல்வேறு பிரிவுகளில் அர்த்தமுள்ள உறவுகளை கட்டியெழுப்புவதிலும் அவர் வழியேற்படுத்தியிருந்தார். LNBTI இனால் இரு நாடுகளிலும் காணப்படும் பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்யும் வகையில், ஜப்பானுக்கு தகவல் தொழில்நுட்ப மனித வளங்கள் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு அவசியமான அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதிலும் பங்களிப்புச் செய்கின்றது. மேலும், ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே கலாசார ஈடுபாடுகளை கட்டியெழுப்புவதில் இவர் முக்கிய பங்காற்றுவதுடன், இதில், கடந்த ஆண்டின் பொன் ஒடோரி (Bon Odori) கொண்டாட்டத்தை முன்னெடுப்பதற்கு LNBTI இன் மாணவர்களை ஈடுபடுத்தி, ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருட பூர்த்தியை அழகாக அலங்கரிக்கும் வகையில் பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.
 
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதில் பேராசிரியர் குமார காண்பித்திருந்த அர்ப்பணிப்பான செயற்பாடுகளை பாராட்டும் வகையில் தூதுவர் மிசுகொஷி கருத்து வெளியிட்டிருந்தார். LNBTI இன் பிரத்தியேகத்தன்மையை இவர் குறிப்பிட்டதுடன், பேராசிரியர் குமாரவின் சிறந்த வழிகாட்டலின் கீழ் இந்த கல்வியகத்தினூடாக பல இலங்கையின் இளம் மாணவர்களுக்கு கல்வியறிவூட்ட முடியும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதனூடாக, அவர்களுக்கு ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும்.
 
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவை இந்த வைபவம் மேலும் மேம்படுத்துவதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.