மனிதநேய உதவிகளுக்கான ஜப்பானின் துரித அர்ப்பணிப்பை ஜப்பானிய பாராளுமன்ற வெளிவிவாகர பிரதி அமைச்சர் மீள உறுதி செய்தார்

2023/10/10

ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் (WFP) ஆதரவுடன் அவசர உணவு உதவி மற்றும் போஷாக்கு ஆதரவுப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வு ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்றதுடன், இதில் ஜப்பானிய அரசாங்கத்தின் வெளி விவகார பாராளுமன்ற பிரதி அமைச்சர் கொமுரா மசாஹிரோ கலந்து கொண்டார். இந்நிகழ்வில், பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்தீகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


7200 மெட்ரிக் டொன் அரிசி, பருப்பு, மரக்கறி எண்ணெய், சோளம் மற்றும் சோயா அவரை ஆகியவற்றை உணவு உணவு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக பாராளுமன்ற பிரதி அமைச்சர் கொமுரா கையளித்திருந்தார். இவற்றின் பெறுமதி 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதற்கான நிதியை ஜப்பானிய அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருந்தது. 2022 ஜுன் மாதம் ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் அவசர செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், ஜப்பானின் மொத்த பங்களிப்பு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக காணப்படுவதுடன், இதுவரையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார் அடங்கலாக மொத்தமாக 2 மில்லியன் அனுகூலம் பெறுவோர் இந்த உதவியினூடாக பயன் பெற்றுள்ளனர்.


பாராளுமன்ற பிரதி அமைச்சர் கொமுரா மசாஹிரோ கருத்து வெளியிடுகையில், இலங்கை மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு இந்த உதவி பயனுள்ளதாக அமைந்திருப்பதாக கருதுவதாக குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் அபிவிருத்திக்கு அவசியமான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கான தமது அர்ப்பணிப்பையும் இவர் வெளிப்படுத்தியிருந்தார். அதனூடாக இலங்கையுடன் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் நட்புறவை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.