பேராசிரியர். தில்ருக்ஷி ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு அமைச்சரின் கௌரவிப்பு

2023/10/20

களனி பல்கலைக்கழகத்தின் நவீன மொழிகள் திணைக்களம், மனிதநேய பீடத்தின் ஜப்பானிய மொழி பேராசிரியரான தில்ருக்ஷி ரத்நாயக்கவுக்கு, வெளிநாட்டு அமைச்சரின் கௌரவிப்பை, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி ஒக்டோபர் 20ஆம் திகதி வழங்கியிருந்தார்.    
 
இலங்கையில் ஜப்பானிய மொழியை மேம்படுத்துவதற்கு பேராசிரியர் தில்ருக்ஷி ரத்நாயக்க குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்தார். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையே நற்பண்பு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியிருந்தார். கல்வித் துறையில் இவர் அதிகளவு ஈடுபாட்டை கொண்டிருந்ததுடன், இலங்கையில் ஜப்பானிய மொழி ஊக்குவிப்பிலும் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தார். ஜப்பானிய மொழி ஆசிரியராக பேராசிரியர் ரத்நாயக்க தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்திருந்ததுடன், பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். களனி பல்கலைக்கழகத்தில் நவீன மொழிகள் பிரிவின் தரம் 1 சிரேஷ்ட விரிவுரையாளராக இவர் பணியாற்றுகின்றார்.
 
200 செப்டெம்பர் மாதம் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட தென்மேற்கு ஆசிய இளைஞர் வரவேற்பு நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டில் மொன்புஷோ ஜப்பானிய அரசு புலமைப்பரிசிலை பெற்றுக் கொண்டார். ஜப்பானின், நாகோயா பல்கலைக்கழகத்தின் Graduate School of Letters இடமிருந்து M.Phil. மற்றும் Ph. D பட்டங்களையும் இவர் பெற்றுக் கொண்டார்.


இலங்கையில் ஜப்பானிய மொழி கற்கைகளின் அடையாளமாக பேராசிரியர் தில்ருக்ஷி ரத்நாயக்க திகழ்கின்றார். ஜப்பானிய மொழியில் அவர் கொண்டுள்ள அறிவினை, வகுப்பறையில் மாத்திரம் கற்பிக்க மட்டுப்படுத்தாமல், பரந்தளவு இலங்கை மாணவர்களை சென்றடையும் வகையில், பல பிரசுரங்கள், ஆக்கங்களை வெளியிட்டுள்ளதுடன், ஜப்பானிய மொழியில் விளக்கங்களை முன்னெடுத்துள்ளார். ஜப்பானிய மொழி கல்வியில் அவரின் அர்ப்பணிப்பினூடாக, பயிலுனர்களின் ஈடுபாட்டை குறிப்பிடத்தக்களவு விரிவாக்கமடைந்துள்ளதுடன், இலங்கையில் ஜப்பானிய மொழி கல்வியின் தரத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
 
தூதுவர் மிசுகொஷி தமது உரையில், வெளிநாட்டு அமைச்சரின் கௌரவிப்பைப் பெற்ற பேராசிரியரான தில்ருக்ஷி ரத்நாயக்கவுக்கு தமது பாராட்டுதல்களை தெரிவித்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிப்பதில் அவர் காண்பித்த முயற்சிகளுக்கு தமது நன்மதிப்பையும் வெளியிட்டிருந்தார். அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்பிப்பதில் பேராசிரியரான தில்ருக்ஷி ரத்நாயக்க ஆற்றும் பங்களிப்பை அவர் பாராட்டியிருந்தார். இந்த கௌரவிப்பு நிகழ்வினூடாக ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே நட்புறவை மேலும் கட்டியெழுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
ஜப்பான் மற்றும் இதர நாடுகளுக்கிடையே நட்புறவு மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பதில் சிறந்த சாதனைகளை கொண்டிருக்கும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு வெளிநாட்டு அமைச்சரின் கௌரவிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த கௌரவிப்புகளினூடாக அவற்றை பெறுவோருக்கு ஜப்பானிய பொது மக்களின் ஆதரவை பெற்றுக் கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.