பேராசிரியர் உபுல் பண்டார திசாநாயக்கவுக்கு 'The Order of the Rising Sun, Gold Rays with Neck Ribbon' கௌரவிப்பு

2023/11/9
கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளக வைபவமொன்றில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி அவர்களால், பேராசிரியர் உபுல் பண்டார திசாநாயக்க அவர்களுக்கு ‘The Order of the Rising Sun, Gold Rays with Neck Ribbon’ கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த வைபவம் 2023 நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற்றது. ஜப்பான் மற்றும் இலங்கை நாடுகளிடையே கல்விசார் பங்காண்மைகளை ஊக்குவிப்பதில் பேராசிரியர் திசாநாயக்க அவர்கள் ஆற்றியிருந்த பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.


பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தராகவும், பல்கலைக்கழக நிர்வாக சபையின் தவிசாளராகவும் புகழ்பெற்றுள்ள பேராசிரியர். உபுல் பண்டார திசாநாயக்க, இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரின் வழிகாட்டலின் கீழ், JICA செயற்திட்டமான "Dental Education and Oral Health Promotion of the Faculty of Dental Sciences" என்பது வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டதுடன், நவீன வசதிகள் படைத்த சிகிச்சையளிப்பு மற்றும் ஆய்வு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. ஜப்பானின் முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்களுடன் கல்விசார் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு இந்த நடவடிக்கை உதவியாக அமைந்திருந்தது.


பற்கள் விஞ்ஞானம் தொடர்பான பிரிவின் கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் சென்றதாக பேராசிரியர் திசாநாயக்க அவர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு அமைந்துள்ளது. JICA இன் மூன்றாம் நாட்டு பயிற்சி நிகழ்ச்சிகளை முன்னெடுத்திருந்தமை, விவசாயம், பொறியியல் மற்றும் சூழல் கற்கைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் கைகோர்ப்புகளை ஏற்படுத்தியிருந்தமை போன்றவற்றில் அவரின் தலைமைத்துவம் காணப்பட்டமை இதற்கு ஆதாரமாகும். ஜப்பானிய பல்கலைக்கழகங்களுடன் பங்காண்மை புரிந்துணர்வு உடன்படிக்கைகளையும், இணைந்த ஆய்வு செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு இவரின் முயற்சிகள் பெரும் பலமாக அமைந்திருந்தன.


வைபவத்தின் போது, தூதுவர் மிசுகொஷி, பேராசிரியர் திசாநாயக்க அவர்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்திருந்ததுடன், ஜப்பான் மற்றும் இலங்கை இடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு அவர் காண்பிக்கும் அர்ப்பணிப்பையும் பாராட்டியிருந்தார். எதிர்வரும் ஆண்டுகளிலும் இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர உறவை கட்டியெழுப்புவதில் பேராசிரியர் திசாநாயக்க முக்கிய பங்காற்றுவார் என தாம் நம்புவதாக தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டிருந்தார்.