ஜப்பானில் பணியாற்றுவதற்கு புதிய வாய்ப்பு நிர்மாணத்துறையில் திறன் படைத்த பணியாளர்களுக்கான களத்திறன் பரீட்சை ஆரம்பித்துள்ளது

2023/12/1
ஜப்பானில் பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் நிர்மாணத்துறையில் திறன் படைத்த பணியாளர்களுக்கான களத்திறன் பரீட்சை ஆரம்பிப்பது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தவிசாளர் ஏ.ஏ.எம். ஹில்மி ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு முதல் அமுலிலுள்ள தாதியியல் பராமரிப்பு, உணவு சேவை மற்றும் விவசாயம் ஆகியவற்றில் திறன் பரீட்சைகள் அடங்கலாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிர்மாணத்துறைக்கான பரீட்சையுடன் மொத்தமாக நான்கு துறைகளுக்கான பரீட்சைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.


 
தமது உரையில் தூதுவர் மிசுகொஷி குறிப்பிடுகையில், ஜப்பானில் பணியாற்றுவதற்கு பல திறமையான இலங்கையர்களுக்கு இந்த வாய்ப்பு ஏதுவாக அமைந்திருக்கும் என தாம் நம்புவதாகவும், ஜப்பானின் நிர்மாணத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவது மாத்திரமன்றி, இலங்கையின் அந்நியச் செலாவணி திரட்டலுக்கும் பங்களிப்பு வழங்குவதாக அமையும். கடந்த ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட திறன் பரீட்சையைத் தொடர்ந்து, ஜப்பானிய மொழியை பயில்வதற்கான ஈடுபாடு அதிகரித்துள்ளதையையும் அவர் வரவேற்றிருந்தார். இலங்கையில் ஜப்பானிய மொழிக் கல்விக்கு ஆதரவளிக்க மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் பற்றியும் விளக்கமளித்திருந்தார். இலங்கையின் மக்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க ஜப்பானிய அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பு காணப்படுவதையும் அவர் மீள உறுதி செய்ததுடன், இலங்கையுடன் நீண்ட காலமாக பேணும் நட்புறவை மேலும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.


 
பதிவுகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு Prometric இணையத் தளமான https://www.prometric-jp.com/en/ssw/ ஐ பார்க்கவும்.