தர்ஷன் முனிதாஸவுக்கு 2023 ஜப்பானின் உயர் கௌரவிப்பு

2024/1/30
இலங்கையின் நிஹொன்பஷி உணவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் உரிமையாளருமான தர்ஷன் முனிதாஸவுக்கு, ஜப்பானின் உயர் கௌரவிப்பான “The Order of the Rising Sun, Gold and Silver Rays” என்பது வழங்கப்பட்டிருந்தது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, 2024 ஜனவரி 30 ஆம் திகதி இந்த உயர் கௌரவிப்பை வழங்கியிருந்தார். இலங்கையில் ஜப்பானிய உணவு வகைகளை பிரபல்யப்படுத்துவதில் தர்ஷன் ஆற்றும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.


1995 ஆம் ஆண்டு நிஹொன்பஷி ஜப்பானிய உணவகம் நிறுவப்பட்டது முதல், ஜப்பானிய உணவு வகைகளை இலங்கையில் அறிமுகம் செய்வதில் தர்ஷன் முனிதாஸ முக்கிய பங்காற்றியிருந்தார். உயர் தரம் வாய்ந்த ஜப்பானிய மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான தமது அர்ப்பணிப்பு மற்றும் பாரம்பரிய ஜப்பானிய உணவு தயாரிப்பு முறைகளை பேணுவதற்கான அர்ப்பணிப்பு போன்றவற்றினூடாக, வாடிக்கையாளர்களின் உணவருந்தும் அனுபவத்தை முனிதாஸ மேம்படுத்தியிருந்தார். இலங்கை மற்றும் ஜப்பானிடையிலான கலாசார பரிமாற்றத்துக்கும் பங்காற்றியிருந்தார்.


ஜப்பானிய உணவகமொன்றை பேணுகின்றமைக்காக மாத்திரமன்றி, ஜப்பானிய உணவு வகைகள் மற்றும் கலாசாரத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதில் முனிதாஸ ஆற்றிவரும் பங்களிப்பை தூதுவர் மிசுகொஷி பாராட்டியிருந்தார். அண்மைக்கால செயற்பாடுகளின் அங்கமாக, மஹரகமவில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜப்பானிய கலாசார நிகழ்வான Bon Odori நிகழ்வில் பாரம்பரிய ஜப்பானிய உணவு வகைகளை தயாரித்து வழங்குவதிலும் முனிதாஸ தமது பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற பல இலங்கையர்களுக்கு ஜப்பானிய உணவு வகையை சுவைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.
 
ஜப்பானுடன் நட்பான உறவுகளை பேணுவதில் முக்கிய பங்காற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஜப்பானிய முடியரசினால் வழங்கப்படும் உயர் கௌரவிப்பாக “The Order of the Rising Sun” அமைந்துள்ளது.
 
இந்த நிகழ்வினூடாக ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான பரஸ்பர உறவு மேலும் கட்டியெழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.