நீண்ட காலமாக காத்திருந்த “அனுராதபுரம் வடக்கு நீர் விநியோக திட்டம் கட்டம் 1” பூர்த்தி செய்யப்பட்டுள்ளது
2024/2/16

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்ட “அனுராதபுரம் வடக்கு நீர் விநியோகத் திட்டம் கட்டம் 1” பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கும் வைபவத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி கலந்து கொண்டார். பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெற்ற இந்த வைபவத்தில், இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீர் விநியோகம் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு விருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நீர்ப்பாசனம் மற்றும் நீர் விநியோக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தில் இலங்கைக்கான JICA தலைவர் கலாநிதி. டனாகா அகிஹிகோ கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

5.2 பில்லியன் ஜப்பானிய யென்கள் (சுமார் 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதி வாய்ந்த இந்த கடன் திட்டம், 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அனுராதபுரத்தைச் சேர்ந்த சுமார் 61,000 மக்களுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பான நீர் வசதியை வழங்குவதை நோக்காகக் கொண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நீண்ட காலமாக கொடிய சிறுநீரக நோயால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அனுராதபுரத்தில் விவசாயம் மற்றும் தொழிற்துறை போன்றவற்றின் விருத்தியுடன், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அத்திவாரமாக இந்தத் திட்டம் அமைந்திருக்கும்.

தொற்றுப் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும், இந்த மைல்கல் திட்டத்தை பூர்த்தி செய்தமைக்காக இலங்கையின் ஜனாதிபதிக்கும், இதர விருந்தினர்களுக்கும் தூதுவர் மிசுகொஷி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இலங்கையின் மீட்சிக்கு முன்னோடியாக இந்த திட்டத்தின் பூர்த்தி அமைந்திருக்கும் என்பதை அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியிருந்ததுடன், மேலும் தொடர்ந்துவரும் காலங்களிலும் பல அபிவிருத்திகளுக்கு முன்னோடியாக அமைந்திருக்கும். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்திருக்கும் என்பதுடன், எவ்வேளையிலும் இலங்கையுடன் உறுதியான உறவைப் பேணுவதில் தம்மை அர்ப்பணிப்பதாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.