ஜப்பானின் முடியரசரின் 64ஆவது பிறந்த தினத்தை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் கொண்டாடியது
2024/2/22

ஜப்பானின் முடிக்குரிய அரசரின் 64ஆவது பிறந்த தினத்தை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் அண்மையில் கொண்டாடியது. இந்த நிகழ்வு 2024 பெப்ரவரி 21ஆம் திகதி கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையே காணப்படும் நீண்ட கால நட்பை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

பாராளுமன்ற உறுப்பினரும், நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற அங்கத்தவர்கள் மற்றும் இதர அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக அனைவருக்கும் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி நன்றி தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர உறவுகளை மேலும் கட்டியெழுப்புவது மற்றும் பரஸ்பர சுபிட்சத்தை ஊக்குவிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் மற்றும் சுபிட்சமான செயற்பாடுகள் தொடர்பில் தூதரகம் நல்வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்குமிடையே சுமுகமான மற்றும் பரஸ்பர நட்பான உறவுகளை பேணுவதற்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பையும் மீளுறுதி செய்திருந்தது.