ஜப்பான் US$3 மில்லியன் மானியத்துடன் இலங்கையில் நன்னீர் மீன்பிடி அபிவிருத்திக்கான ஆதரவை ஊக்குவிக்கிறது

2024/4/25
ஏப்ரல் 25 ஆம் தேதி, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுறவின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கிராமப்புற சமூகங்களின் "உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தன்னிறைவான வளர்ப்பு அடிப்படையிலான நன்னீர் மீன்வளத்தை மேம்படுத்துதல்" என்ற திட்டத்தின் ஆரம்பத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
 

 
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAO) இணைந்து ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் உள்நாட்டு மீன்பிடியை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இம்முயற்சியானது, இலங்கையின் மீன்பிடித் துறையில் கடல்சார் மீன்பிடிக்கு அப்பால் நன்னீர் மீன்பிடியின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதில் ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்ணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
 
தூதுவர் மிசுகொஷி தனது உரையில், "ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய இரு தீவு நாடுகளும் தமது பொருளாதாரங்கள் மற்றும் கலாச்சாரங்களில் மீன்வளத்தின் முக்கியத்துவத்தினையும் ஈடுபாட்டையும் பகிர்ந்து கொள்கின்றன” என்று கூறி இக்கூட்டாண்மைக்கான ஜப்பானின் நீடித்த அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். இந்த பகிரப்பட்ட முக்கியத்துவத்தை அங்கீரித்து ஜப்பான் இலங்கையின் மீன்பிடி வளர்ச்சிக்கு திடமான ஆதரவை வழங்கி வருகிறது.
 
இத் திட்டம் FAO இன் வெற்றிகரமான அமுலாக்கத்திற்கான அர்ப்பணிப்புடன், இலங்கையின் கிராமப்புற சமூகங்களில் உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றில் நீடித்த நேர்மறையான தாக்கங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும். இலங்கையின் மீன்பிடித் துறைக்கு ஆதரவளிப்பதற்கும், கிராமப்புற சமூகங்கள் மற்றும் மீன்பிடித் தொழில் செழிக்கும் எதிர்காலத்திற்காக பாடுபடுவதற்கும் ஜப்பான் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.