ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்த ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுகிறது
2025/7/1

1 ஜூலை 2025, கொழும்பு, இலங்கை: ஊழல், நிலையான வளர்ச்சியை, அதன் குடிமக்களின் நல்வாழ்வை, நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை மற்றும் வரிவிதிப்பின் உறுதியை குறைக்கும் வகையில் பாதிக்கிறது. ஊழலின் தாக்கம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளிலும் உணரப்படுகிறது.
ஊழல் கணிக்க முடியாத மற்றும் ஆபத்தான வணிகச் சூழலை உருவாக்குவதால், வெளிநாட்டு முதலீடுகளை கணிசமாகத் தடுக்கிறது. முதலீட்டாளர்கள் பெரும்பாலும் அதிக அளவிலான ஊழலை, பலவீனமான நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் அறிகுறியாகக் கருதுகின்றனர். இது, அவர்களின் முதலீடுகளின் பாதுகாப்பு, நியாயமற்ற போட்டிக்கான சாத்தியக்கூறுகள் குறித்த கவலைகளுக்கு வழிவகுக்கிறது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அதிமேதகு அகியோ இசொமதா மற்றும் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா ஆகியோர், நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார முன்னிலையில், ‘ஊழல் எதிர்ப்பு பொறிமுறையை நிறுவுவதன் மூலம் ஊழல் நடைமுறைகளை வழக்குத் தொடுப்பதை ஊக்குவிப்பதற்கான திட்டம்’ என்ற தலைப்பில் புதிய திட்டத்தை இன்று நடைபெற்ற கையெழுத்து விழாவின் மூலம் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற உயர் மட்டத்தினர்: கௌரவ பரிந்த ரணசிங்க (சட்டமா அதிபர்), லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) ஆணையர்கள் திரு கே.பி. ராஜபக்ச மற்றும் திரு சேதிய குணசேகர பி.சி.,ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக குமநாயக்க,மற்றும் பங்கேற்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள்.
‘ஊழல் எதிர்ப்பு பொறிமுறையை நிறுவுவதன் மூலம் ஊழல் நடைமுறைகளை வழக்குத் தொடுப்பதை ஊக்குவிப்பதற்கான திட்டம்’, ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு, இலங்கையில் UNDP மூலம் செயல்படுத்தப்படும் 3 ஆண்டுகள் கால திட்டமாகும். 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தத் திட்டம், நிர்வாகம் மற்றும் வணிக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, பொது மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறைகளில் பயனுள்ள மற்றும் நிறுவனமயமான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், ஊழல் தொடர்பான புலனாய்வு செயல்முறைகளை மேம்படுத்த, நிறுவனங்களை வலுப்படுத்துதல், பங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்பை அதிகரித்தல் மற்றும் வழக்குத் தொடரல்களின் தரத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட நோக்கங்களும் உள்ளன.
ஊழலுக்கு எதிராக திறம்பட அணிதிரட்டவும், சமூக பொறுப்புணர்வை மேம்படுத்தவும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதே முக்கிய நோக்கமாகும். இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பத்திரிகையாளர்களை ஈடுபடுத்தி, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களைச் செயல்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

அகியோ இசொமதா, இலங்கைக்கான ஜப்பான் தூதராக, ஜப்பானின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியபோது,“ஊழலை ஒழித்தல் மற்றும் நல்லாட்சி ஆகியவை போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கு ஒரு முன் தேவைப்பாடாகும். அவை எந்தவொரு வணிக சமூகத்திற்கும் அடிப்படை உட்கட்டமைப்பாகவும் இருக்கின்றன. இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது அவசியம். புதிய அரசாங்கத்தின் முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம். நடுத்தர மற்றும் நீண்டகால பொருளாதார மேம்பாட்டு உத்திகளை வளர்த்தல், தொழில்துறை ஊக்குவிப்புக்கான கொள்கைகளை வெளியிடுவது போன்றவற்றின் மூலம், புதிய முதலீட்டுகளுக்கான வாய்ப்புகளை நன்கு புரிந்துகொள்ள முடியும். ஜப்பான், இந்த எதிர்கால முயற்சிகளில் இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து செயற்படும்.”
ஊழல், பொதுத் துறைகள் மீதான நம்பிக்கையை குறைக்கும், முதலீட்டாளர்களைத் தடுக்கிறது, இதனால் வெளிநாட்டு முதலீடு குறைகிறது, பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது. அத்தியாவசிய சேவைகளிலிருந்து வளங்கள் திசைதிருப்பப்படுகின்றன, வறுமை அதிகரிக்கிறது, சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகிறது மற்றும் பொதுச் சுகாதாரம் அச்சுறுத்தப்படுகிறது. இது சமூக உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தி, அமைதியின்மையைத் தூண்டி, வன்முறையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. இறுதியில், ஊழல், சமூகத்தின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
UNDP-வின் பங்கு குறித்து, வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா கூறுகையில்:“ஊழலை ஒழிக்க இலங்கை தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, ஜப்பான் அரசாங்கமும் மக்களும் வழங்கும் நிதியுதவியின் மூலம், CIABOC உடனான இந்த கூட்டாண்மை நல்லாட்சியை நோக்கிய நமது பயணத்தில் முக்கிய நிலைபாதையை குறிக்கிறது.
இந்தத் திட்டம், நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது, குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதைக் குறிக்கிறது.
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025–2029 ஐ செயல்படுத்துவதன் மூலம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலின் கலாச்சாரத்தை வளர்க்கும் ஒரு முழுமையான சமூக அணுகுமுறையை ஆதரிப்பதே எங்கள் நோக்கம்.
ஊழலுக்கு எதிரான முயற்சிகள் நீடித்தவை மட்டுமல்ல, மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிசெய்ய, UNDP தனது தேசிய பங்காளர்களுடன் இணைந்து பணியாற்ற உறுதியளிக்கிறது.”
இத்திட்டத்தின் முழுமையான நோக்கம், தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025–2029 (NACAP) இல் முன்மொழியப்பட்ட செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்துவதே. இது மிகவும் வெளிப்படையான, பொறுப்புணர்வு மற்றும் மீளாய்வு வசதியுடைய சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறுதியில், இது ஊழலைக் கணிசமாகக் குறைத்து, பொதுமக்கள் நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். இந்தத் திட்டம், சமூகமெங்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அணுகுமுறையை ஆதரிக்கிறது.