பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரும் தேசிய பிரச்சாரத்தை இலங்கை ஆரம்பிக்கிறது - இது இலங்கை அரசாங்கம், ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றனால் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் அனைவருக்கும் பாதுகாப்பான, துன்புறுத்தலற்ற பயணத்தை உறுதி செய்யும் ஒரு முயற்சி.
2025/7/23

பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய பிரச்சாரம் பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய கேட்போர் கூடத்தில் இன்று (ஜூலை 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சு ஆகியவற்றால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்- இலங்கையினால் (UNFPA Sri Lanka) தொழில்நுட்ப ரீதியாக ஆதரவளிக்கப்பட்டதுடன், பாதுகாப்பான, பாலின-உணர்திறன் கொண்ட பொது இடங்களை உருவாக்குவதையும், மற்றும் சகல பயணிகளுக்கும், குறிப்பாக, பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் கண்ணியத்தையும்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது பரவலாகக் காணப்படும் ஒரு சவாலாக உள்ளதுடன், இது பெண்கள் மற்றும் சிறுமிகளை விகிதாசாரமற்றுப் பாதிப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்க்கையில் அவர்களின் ஈடுபாட்டுக்கு தடையாக அமைகிறது. இந்தப் பிரச்சாரமானது, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை [Sexual and Gender-Based Violence (SGBV)] தடுப்பதற்கான இலங்கையின் தேசிய செயல் திட்டத்திற்கு (2024–2028) ஆதரவளிப்பதுடன், பொதுப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாகவும், நவீனமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக உள்ளது.
இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது பரவலாகக் காணப்படும் ஒரு சவாலாக உள்ளதுடன், இது பெண்கள் மற்றும் சிறுமிகளை விகிதாசாரமற்றுப் பாதிப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்க்கையில் அவர்களின் ஈடுபாட்டுக்கு தடையாக அமைகிறது. இந்தப் பிரச்சாரமானது, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை [Sexual and Gender-Based Violence (SGBV)] தடுப்பதற்கான இலங்கையின் தேசிய செயல் திட்டத்திற்கு (2024–2028) ஆதரவளிப்பதுடன், பொதுப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாகவும், நவீனமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக உள்ளது.

பொதுமக்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளும்போது அருகில் இருப்பவர்களின் உதவிகளைப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தொடர்ச்சியான குறும் திரைப்படங்களும், அது தொடர்பான சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், முறைப்பாடுகளை வழங்குவதற்கான உடனடி தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய சட்டைப்பையில் வைத்துக்கொள்ளக்கூடிய அட்டைகள், பிரதான இடங்களில் இலத்திரனியல் (டிஜிட்டல்) தகவல்கள், மற்றும் துன்புறுத்தல் அற்ற பொதுப் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் வலுவான சமூக ஊடக அணுகுமுறை மற்றும் அறிவிப்புகள் என்பன இத்தொடர் பிரச்சாரத்தில் இடம்பெறும். முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கும் சேவைகளைப் பெறுவதற்கும் ஊக்குவிக்கும் வகையில், பின்வரும் பிரதான உதவி எண்கள் அனைத்துப் பிரச்சாரப் பொருட்களிலும் முக்கியமாகக் காட்சிப்படுத்தப்படும்:
- பெண்கள் உதவி இலக்கம் (1938)
- பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் (109)
இலங்கைக்கான UNFPA யின் பிரதிநிதி திரு. குன்லே அன்டேனியி அவர்கள், UNFPA-யின் நீண்டகால ஆதரவை வலியுறுத்திப் பேசுகையில், “பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு அமைதியான தொற்றுநோயாகும், இது பெரும்பாலும் ஒரு சாதாரணமான விடயமாகக் கருதப்பட்டு, புறக்கணிக்கப்பட்டாலும், இது ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2015-இல், UNFPA-யின் தேசிய ஆய்வு ஒன்று, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 90% பேர் பொதுப் போக்குவரத்தில் ஒருமுறையாவது பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர், ஆனால் 4% மட்டுமே உதவியை நாடியுள்ளனர் என வெளிப்படுத்தியது. இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, அவை உண்மையான மக்களையும், உண்மையான பயணங்களையும், உண்மையான பாதிப்பையும் குறிக்கின்றன. அச்சமின்றிப் பாடசாலைக்குச் செல்ல ஒவ்வொரு சிறுமிக்கும் உரிமையுண்டு. ஒவ்வொரு பெண்ணுக்கும் சுதந்திரமாக வேலை செய்யவும், நடமாடவும் உரிமையுண்டு. அனைவருக்கும் பொதுப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக்குவதற்கும், பாதுகாப்பை அனைவரின் பொறுப்பாக மாற்றுவதற்கும் அரசாங்கம், ஜப்பான் தூதரகம் மற்றும் எங்கள் பங்காளர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதற்கு UNFPA உறுதியாக உள்ளது,” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “பொது இடங்களில் இடம்பெறும் பாலின அடிப்படையிலான வன்முறை ஒரு பாதுகாப்பு சார்ந்த கவலை மட்டுமல்ல, இது ஒரு மனித உரிமைகள் சார்ந்த பிரச்சனையாகும். பேருந்துகள், ரயில்கள் மற்றும் நிலையங்களில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தலானது, சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் பொது வாழ்க்கையில் பெண்களின் அணுகலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அனைவரதும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது நமது பொறுப்பாகும். ஒவ்வொரு பெண்ணும், சிறுமியும் அச்சமின்றி வாழவும், நடமாடவும், செழித்து வளரவும் இந்த பிரச்சாரம் ஒரு மைல்கல்லாக அமைகிறது. இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தீர்ப்பதற்கு நீண்டகால ஆதரவு மற்றும் தொழில்நுட்ப தலைமைத்துவத்தை வழங்குவதற்காக UNFPA-க்கு நான் நன்றி கூறுகிறேன்,” என்று தெரிவித்தார்.
தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் தேசிய பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்தமை குறித்து இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மேன்மைதங்கிய அகியோ இஸொமாடா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுத்து, அதைக் கையாள்வதன் மூலம், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு அத்தியாவசியமானதுடன், சமூகத்தில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும் மிக முக்கியமானது. பாலியல் துன்புறுத்தல்களைப் பொறுத்துக்கொள்ளளாமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கையாகும், ஏனெனில், இது துன்புறுத்துபவர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய அறிவைப் பகிர்ந்துகொள்வதாகவும், அதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அருகிலிருப்போரை (bystanders) நடவடிக்கை எடுக்க ஊக்குவிப்பதாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வளங்களைப் பயன்படுத்தி, இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து நாடு முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை வலுப்படுத்தும் என்று நான் மனதார நம்புகிறேன்,” என்று கூறினார்.

இவ் ஆரம்ப நிகழ்வில், பிரச்சாரப் பொருட்கள், பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் மற்றும் முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கான வழிமுறைகள் மற்றும் அருகில் இருப்பவர்களின் தலையீடு குறித்த தகவல் மையங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு ஆக்கபூர்வமான கண்காட்சியும் இடம்பெற்றது. பிரச்சார வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் செய்திகள் இன்று முதல் நாடு முழுவதும் வெளியிடப்படும்.