UNFPA மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் நுவரெலியாவில் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான (GBV) முதலாவது தங்குமிடம் திறந்துவைப்பு
2025/7/31

பாலின அடிப்படையிலான வன்முறையில் (GBV) இருந்து தப்பிய பெண்களுக்கான முதலாவது பிரத்தியேக தங்குமிடம் நுவரெலியாவில் இன்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. இது வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உதவி வழங்கும் சேவைகளை வலுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.
நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சின் மகளிர் பணியகத்தின் கீழ், ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவி மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) தொழில்நுட்ப உதவியுடன் நிறுவப்பட்ட இந்த தங்குமிடம், வேர்ல்ட் விஷன் லங்கா மற்றும் மகளிர் அபிவிருத்தி மையம் (WDC) ஆகியவற்றால் நிர்மாணிக்கப்பட்டு கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அதிமேதகு அகியோ இஸொமாடா, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மூத்த பிரதிநிதிகள், மகளிர் பணியகம், நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் UNFPA யின் பங்குபற்றலுடன் திறந்து வைக்கப்பட்டது. இந்த தங்குமிடமானது பெண்கள் அபிவிருத்தி மையம் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மகளிர் பணியகத்தால் நிர்வகிக்கப்படும்.

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறையானது ஒரு தொடர் பிரச்சினையாகவே காணப்படுகிறது. அத்துடன், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை தடுப்பதற்கான நாட்டின் இரண்டாவது தேசிய செயல் திட்டத்தின் (2024–2028) கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவது முன்னுரிமைப்படுத்தப்படுகிறது. நுவரெலியாவில் உள்ள புதிய தங்குமிடம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி பாதுகாப்பு, தற்காலிக தங்குமிடம், உளவியல்சார் உதவி, சட்ட உதவி மற்றும் சுகாதார சேவைகளுக்கான வழிவகைகள் என்பனவற்றை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தப்பிப் பிழைத்தவரை - மையப்படுத்திய, கண்ணியமான பதில்வழங்கலை உறுதி செய்யும்.
UNFPA யின் இலங்கைகான பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில், “இந்த தங்குமிடமானது பாதுகாப்பு மற்றும் உதவி நாடி தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப விரும்பும் பெண்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் பாதுகாப்பான புகலிடமாகவும் திகழ்கிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், எவரும் கைவிடப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம், ஜப்பான் அரசாங்கம் மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் UNFPA தொடர்ந்தும் உறுதியாக உள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அதிமேதகு அகியோ இசொமதா கருத்துரைக்கையில், இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களின் நலனை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கிவரும் என மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், மத்திய, மாகாண அரசுகள், காவல்துறை, உள்ளூர் சமூகங்கள் மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அவர் கூறியதாவது:
"ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) தற்போதைய திட்டம், ஜப்பானிய அரசாங்கம் அதன் இராஜதந்திரத்தின் முக்கிய தூணாகக் கருதும் 'மனிதப் பாதுகாப்பு' (Human Security) என்ற கருத்தாக்கத்துடன் மிகவும் ஒத்துப்போகிறது. நுவரெலியாவில் உள்ள இந்த காப்பகம் மற்றும் இத்திட்டத்தின் கீழ் உள்ள பிற காப்பகங்கள் நல்ல ஆரம்பங்கள். இத் திட்டத்தின் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் தேவையிலுள்ள பெண்களுக்காக மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களால் இதேபோன்ற காப்பகங்கள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான சட்டபூர்வமான நடவடிக்கைகளை உறுதி செய்வதும், தஞ்சம் மற்றும் உதவி நாடும் பெண்களின் சுயசார்புக்காகத் தேவையான ஆதரவை வழங்குவதும் அவசியமாகும். அரசாங்கங்களின் முயற்சிகளுடன், உள்ளூர் சமூகங்கள் மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புகளின் வலுவான ஆதரவுடன், நாட்டில் பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) திறம்படத் தடுக்கப்பட்டு, முறையாகக் கையாளப்படும் என்று நான் நம்புகிறேன்."

உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இந்த தங்குமிடத்தை செயல்படுத்துவதற்காக, நுவரெலியா மாவட்ட செயலகம், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மகளிர் பணியகம் மற்றும் கண்டி மகளிர் அபிவிருத்தி மையம் ஆகியவற்றுக்கு இடையே ஜூன் 2025 இல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, இக்குழுவினர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையின் மகப்பேற்றுப் பிரிவைப் பார்வையிட்டனர். தாய்மார் மற்றும் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பை மேம்படுத்தவும், பிராந்தியத்தின் குளிரான காலநிலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளிடையே ஏற்படும் குளிர் வாதத்தைக் குறைக்கவும், இலங்கையின் சுகாதார அமைப்பில் காலநிலை நெகிழ்திறனை வலுப்படுத்தவும், வெப்பமூட்டும் மற்றும் சூரிய சக்தி அமைப்புகளை அங்கு நிறுவ ஜப்பான் அரசாங்கமும் UNFPAவும் உதவி வழங்கியுள்ளன.
பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) தொடர்பான பரிந்துரைக்கப்படக்கூடிய சேவை மூலங்களை வலுப்படுத்துவதன் மூலமும், அவசியமான உட்கட்டமைப்புக்கு உதவுவதன் மூலமும், இலங்கை அரசாங்கமும், ஜப்பான் அரசாங்கமும், UNFPAவும் இணைந்து நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பான, சமத்துவமான சூழலை உருவாக்க தொடர்ந்து ஈடுபடுகின்றன.
