இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அவசரகால நிவாரணப் பொருட்களை வழங்குகிறது

2025/12/4

டிசம்பர் 4 ஆம் தேதி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மை தங்கிய அகியோ இசொமதா, "டிட்வா" சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதி பாதுகாப்பு அமைச்சர் கௌரவ அருணா ஜெயசேகர அவர்களிடம் அவசர நிவாரணப் பொருட்களை ஒப்படைத்தார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் [Japan International Cooperation Agency (JICA)] மூலம், ஜப்பான் அரசு மொத்தம் 200 கூடாரங்கள், 1,200 போர்வைகள், 1,200 தூங்கும் பட்டைகள் (மெத்தைகள்), 20 ரோல் பிளாஸ்டிக் தாள் (தார்பலின்), 200 சிறிய பிளாஸ்டிக் ஜெர்ரி கேன்கள் மற்றும் 10 நீர் சுத்திகரிப்பான்களை வழங்குகிறது.. தீவின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ந்த நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.


இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த கையளிப்பு விழாவில், இலங்கை பேரிடர் மேலாண்மை மையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு பெற்ற) மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கை அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி திரு. கென்ஜி குரோனுமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


“இந்தப் பொருட்களை வழங்குவது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நம்பிக்கை மற்றும் நட்புறவின் வலுவான பிணைப்புக்கு ஒரு சான்றாகும், மேலும் தேவைப்படும் இலங்கை மக்களுக்கு உதவுவதில் ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இந்த கடினமான நேரத்தில் ஜப்பான் இலங்கை மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது” என்று தூதுவர் இசொமதா குறிப்பிட்டார்.


இந்த அவசர நிவாரணப் பொருட்களின் உதவியைத் தவிர, ஜப்பான் பேரிடர் நிவாரண [Japan Disaster Relief (JDR)] மருத்துவக் குழுவின் 31 உறுப்பினர்கள் இப்போது இலங்கையின் புத்தளம் மாவட்டத்திலுள்ள சிலாபத்தில் உள்ளூர் சமூகத்தில் துன்பப்படும் மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகளை வழங்க உள்ளனர்.