IOM, ஜப்பான், இலங்கையின் முதல் விமான நிலைய மின்னணு நுழைவாயில்கள் (E-Gates) அமைப்பிற்கு ஆதரவு வழங்கி, பாதுகாப்பான எல்லை கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்ட பயணத்தை முன்னேற்றுகின்றன

2026/1/28

கொழும்பு, இலங்கை - இலங்கை, ஒரு நவீன விமான போக்குவரத்து மையமாக உருவாகும் நோக்கில் முக்கியமான ஒரு முன்னேற்றத்தை எடுத்து, தனது எல்லை நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்தி, பயணிகள் வசதிகளை மேம்படுத்தி வருகிறது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ஜப்பான் தூதரகம் மற்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) ஆகியவற்றுடன் இணைந்து, 2026 ஜனவரி 28 அன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கையின் முதல் தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு (ABC) E-கேட்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி, தென்மேற்கு ஆசியாவில் தொற்றுநோய்களுக்கு எதிராகப் பதிலளிக்கும் எல்லை கட்டுப்பாட்டு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் நிதியுதவி வழங்கி IOM மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
 
இந்த நிகழ்வில், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், பொது பாதுகாப்பு அமைச்சகம், குடிவரவு மற்றும் குடியேற்றத் துறை, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (AASL), இலங்கை சுங்கத் துறை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) உள்ளிட்ட முக்கிய எல்லை நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அரச அதிகாரிகள் மற்றும் ஜப்பான் தூதரகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனுடன், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மாண்புமிகு அகியோ இசோமட்டா, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு அனுர கருணாதிலக்க, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் மாண்புமிகு கே. எம். ஆனந்த விஜேபால, மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான IOM தலைமை அதிகாரி கிரிஸ்டின் பார்கோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இந்த சாதனையைப் பற்றி கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு அனுர கருணாதிலக்க அவர்கள், "பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் உலகளாவிய தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை தனது விமான மற்றும் துறைமுகத் துறைகளை நவீனமயமாக்க உறுதியாக உள்ளது. இந்த மூலோபாய முயற்சிகள், சர்வதேச பயணம் மற்றும் வர்த்தகத்திற்கான பாதுகாப்பான மற்றும் திறமையான நுழைவாயிலாக எங்கள் பங்கை வலுப்படுத்துகின்றன" என்று தெரிவித்தார்.
 
மொத்தமாக அமெரிக்க டொலர் 8.4 மில்லியன் மதிப்புடைய இந்த திட்டம்,பிராந்திய தொற்றுநோய் தயார்நிலை, சுகாதார பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடமாற்றம் ஆகியவற்றில் ஜப்பானின் உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அவசர நடவடிக்கைகளை வலுப்படுத்தி, தாங்குதன்மையை கட்டியெழுப்பும் முயற்சிகளையும் இது முன்னேற்றுகிறது. மேலும், இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பொது சுகாதார பாதுகாப்பு மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகள் (IHR) என்பவற்றுடன் இணக்கமான தேசிய முன்னுரிமைகளுடனும் இது ஒத்திணைகிறது.


இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை விரிவான கோணத்தில் எடுத்துரைத்த தூதுவர் இசோமட்டா,
 
"இந்த திட்டம், இலங்கையின் முக்கிய நுழைவாயில்களில் தொற்றுநோய் தயார்நிலையையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்தும் உடனடி நன்மைகளைத் தாண்டிச் செல்கிறது. சமீபத்திய கடுமையான புயல், தொற்றுநோய்களுக்கு மட்டுமல்ல, இயற்கை பேரழிவுகளின் போதும் எல்லைகளில் தயார்நிலையும் தாங்குதன்மையும் எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது; ஏனெனில் அத்தகைய சூழ்நிலைகளில் மனிதர்களும் பொருட்களும் அதிகமாக நகர்வதால், பொது சுகாதார ஆபத்துகள் அதிகரிக்கக்கூடும். நாட்டின் பொருளாதார மீட்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்காக சுற்றுலா துறை மிக முக்கியமானதாக உள்ளது. இந்த IOM செயல்படுத்தும் திட்டத்துடன் இணைந்து, BIA விரிவாக்கத்திற்கான ஜப்பானின் யென்-கடன் உதவி தற்போது நடைப்பெற்று வருகிறது; அதில் புதிய முனையத்தின் கட்டுமானம் முக்கிய கூறாகும். ஜப்பான் அரசின் இந்த விரிவாக்கத் திட்டம் நிறைவு பெறும் போது, சில ஆண்டுகளில் இலங்கையின் பிரதான நுழைவாயில் முழுமையாக மாற்றம் பெற்று, இலங்கை மக்களுக்கு பெருமை தரும் ஒன்றாக மாறும்" என தெரிவித்தார்.
 
அவர் மேலும்
 
"இதற்குடன் இணையாக, சமீபத்திய புயலுக்கான இலங்கையின் பதிலடி நடவடிக்கைகளுக்கு அவசர உதவிகள் மற்றும் மீட்பு மற்றும் பேரழிவு அபாயக் குறைப்புத் தேவைகளை அடையாளம் காணும் தொடர்ச்சியான மதிப்பீடுகள் மூலமாக ஜப்பான் செயற்படுகிறது. எதிர்காலத்தை நோக்கி, சாலை உட்கட்டமைப்பு, நீர் மேலாண்மை மற்றும் பேரழிவு தயார்நிலை உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளில் தாங்குதன்மையை வலுப்படுத்த இலங்கையுடன் இணைந்து செயல்பட ஜப்பான் உறுதியாக உள்ளது. இந்த திட்டம் Clean Sri Lanka' மற்றும் டிஜிட்டலாக்கம் போன்ற தேசிய முன்னுரிமைகளுடனும் நெருக்கமாக இணைந்துள்ளது. தூய்மையான கழிவு மேலாண்மை அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் E-கேட்கள் உள்ளிட்ட நவீன டிஜிட்டல் கருவிகளின் அறிமுகம், சுற்றுச்சூழல் மேலாண்மையையும் பொது சேவைகளின் டிஜிட்டலாக்கத்தையும் வலுப்படுத்தி, பயணிகளின் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது. இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான நம்பகமான கூட்டாளியாக ஜப்பான் தொடர்ந்தும் செயல்படும் என தெரிவித்தார்.
 
மேலும், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவும், ஜப்பான் அரசின் ஆதரவுடனும், IOM இலங்கைக்கு மேம்பட்ட எல்லை நிர்வாகம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்களின் ஒரு தொகுப்பை அதிகாரப்பூர்வமாக கையளித்தது. இதில், முன்னோடியான திரையிடல் அமைப்புகள், உயிர்மெட்ரிக் அணுகல் கட்டுப்பாடுகள் மற்றும் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தி பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் அடங்கும்”.


இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான IOM தலைமை அதிகாரியான கிரிஸ்டின் பார்கோ, திட்டத்தின் பரந்த தாக்கத்தை விளக்கி, "IOM, ஜப்பான் அரசு மற்றும் இலங்கை அரசுடன் இணைந்த வலுவான ஒத்துழைப்பின் அடிப்படையில், இந்த முக்கிய மைல்கல்லுக்குப் பின்னுள்ள தொழில்நுட்ப புதுமைகளை வழிநடத்துவதில் பெருமை கொள்கிறது. பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் சுகாதார தாங்குதன்மையை உறுதி செய்யும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை முக்கிய நுழைவாயில்களில் நிறுவியுள்ளோம்; இதன் மூலம் எல்லை நிர்வாகத்தில் புதிய தரநிலையை உருவாக்கியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
 
புதிய E-கேட்களின் மூலம், பயணிகள் விரைவான குடிவரவு செயல்முறையை அனுபவிக்கவுள்ளனர்; இதனால் காத்திருப்பு நேரம் குறைந்து, விமான நிலையத்தின் மொத்த செயல்திறன் மேம்படும். இந்த மைல்கல், இலங்கையின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் முன்னேற்றத்தையும், தென்னாசியாவில் பாதுகாப்பான, இணைக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்துக்கு தயாரான இடமாற்ற நுழைவாயிலாக அதன் பங்கையும் உறுதிப்படுத்துகிறது.