வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கல்விசார் உட்கட்டுமாண வசதிகளை மேம்படுத்த ஜப்பான் உதவி வழங்குகிறது
2026/3/4

மார்ச் 4, 2026 அன்று, ஜப்பான் தூதுவர் அதிமேதகு திரு. அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் இரு திட்டங்களுக்கு நன்கொடை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கைகள் திருமதி. டெபி எடிரிசிங்கே, Child Action Lanka வின் நிறுவனர் மற்றும் திரு. எம்.ஐ.எம். தையூப், காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவு சங்க லிமிடெட்டின் தலைவர் ஆகியோருடன் கைச்சாத்திடப்பட்டன.
ஜப்பான் அரசு Child Action Lanka மூலம் செயல்படுத்தும் திட்டத்திற்கு 64,594 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 20 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்தத் திட்டதின் மூலம் புதிய சிறுவர் மேம்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்படும். இதில் சிறுவர் முன்பள்ளி அறைகள், IT அறை மற்றும் பிற வசதிகள் உள்ளடங்கும். மேலும் தற்போது உள்ள சிறுவர் முன்பள்ளி வகுப்பறைகள் பாதுகாப்பு இல்லமாகப் புதுப்பிக்கப்படும். இந்த பாதுகாப்பு இல்லம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண்பிள்ளைப் பாதுகாக்க உதவும். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார சூழ்நிலைகளால் பாடசாலை செல்லுவதற்கு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்பிள்ளைகளுக்குத் தங்குமிட வசதிகளையும் வழங்கும்.
காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தால் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டத்திற்காக அமெரிக்க டாலர் 39,249 (சுமார் ரூ. 12 மில்லியன்) வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி காத்தான்குடி மத்திய கல்லூரி சிற்றுண்டிச்சாலையைப் புணரமைக்க உதவுவதோடு உயர் ஊட்டச்சத்து வாய்ந்த உணவுகளை நிலையான விலையில் வழங்கவும் உதவும். இதனால் 2,100 மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்படும்.
உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு ஜப்பானின் உதவியை உறுதிப்படுத்தி தூதுவர் ISOMATA கூறுகையில்: “கடந்த செப்டம்பரில் ஜப்பானில் தன்னுடைய அதிகாரப்பூர்வ பயணத்தின் போது அதிமேதகு ஜனாதிபதி திசாநாயக்க, ஜப்பான் மற்றும் இலங்கை தலைவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் சவால்களை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார். தேசிய நல்லிணக்கம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சி என்பன நெருங்கிய தொடர்புடையவையாகையால், ஜப்பான் இந்த மாகாணங்களின் வளர்ச்சிக்கான ஆதரவை தொடரும் என மீண்டும் உறுதியளிக்கின்றது.” தூதுவர் மேலும் கூறுகையில்: “இன்று கைச்சாத்திடப்பட்ட புதிய திட்டங்கள், பயனாளிகளின் வாழ்க்கை தரம் மற்றும் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஜப்பான் மற்றும் இலங்கை மக்களிடையே நிலைத்திருக்கும் நட்புறவை நீடிக்கும் சின்னங்களாகவும் திகளும்.” என்றார்.

இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த Child Action Lanka வின் நிறுவனர் திருமதி. டெபி எடிரிசிங்கே, இவ்வாறு கூறினார்.
“இந்த திட்டம் நேரடியாக சுமார் 200 குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உதவுவதோடு, சமூகத்தில் மேலும் 750 பேரை சென்றடையும் என்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். Child Action Lanka எமது பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அவர்கள் பெற வேண்டிய கல்வியை வழங்கவும் ஜப்பான் தூதரகத்துடன் பணியாற்றுவதில் பெருமைப்படுகிறது. ஒன்றுசேர்ந்து நாங்கள் வெறும் மையத்தை மட்டும் கட்டவில்லை; நாம் கற்றலுக்கான ஒரு இல்லத்தை உருவாக்குகிறோம். இந்த மையம் மிகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்குவதோடு அவர்கள் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் கல்விகற்க உதவும்.”
இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவு சங்க லிமிடெட்டின் தலைவர் திரு. எம்.ஐ.எம். தையூப், இவ்வாறு கூறினார்.
“காத்தான்குடி மத்திய கல்லூரி சிற்றுண்டிச்சாலையைப் மறுசீரமைக்க ஜப்பான் தூதரகம் உதவுவதையிட்டு, கல்லூரி சமூகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. 2004 சூனாமியின்போது கல்லூரியின் சிற்றுண்டிச்சாலை கடுமையாக சேதமடைந்தது. இதனால் 2,100 மாணவர்கள் சுகாதாரமான, ஊட்டச்சத்து வாய்ந்த, பாதுகாப்பான உணவுகளை உட்கொள்ள முடியவில்லை. இந்த முயற்சி மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, கற்றல் சூழலை மேம்படுத்த உதவும். ஜப்பான் அரசுக்கும் ஜப்பானிய மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.”
1989 முதல், ஜப்பான் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் (GGP) மூலம் இலங்கைக்கு மொத்தம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவிகளை வழங்கியுள்ளது.
