டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து மீட்பு மற்றும் மறுசீரமைத்தல் பணிகளை ஆதரிக்க ஜப்பான் ரேடியோ உபகரணங்களை வழங்குகிறது

2026/3/24
  

மார்ச் 24, 2026 அன்று, ஜப்பான் தூதுவர் அதிமேதகு திரு. அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ், ரேடியோ உபகரணங்களை வழங்க ஒரு நன்கொடை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கை திரு. வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவருடன் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பான் அரசு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு செயல்படுத்தும்  இந்தத் திட்டத்திற்கு 181,837 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 55.7 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் முக்கியமாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட உயர் தரமுடைய உபகரணங்களை வழங்குவதன் மூலம் மீட்புப் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குள் நேரடி ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கி நம்பகமான வலைப்பிணைகளின் நிறுவலுக்கு உதவும். இதில் HF ரேடியோக்கள், கையடக்கமான ரேடியோக்கள் மற்றும் ரிப்பீட்டர்கள் உள்ளடங்கும். இது பேரழிவின்போது தயார் நிலை மேம்படவும் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கான ஒருங்கிணைப்பையும் சுலபமாக்கும்.


இலங்கையின் இயற்கை பேரழிவுகள் மீட்பு பணியில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்த ஜப்பான் கவனம் செலுத்துவதை வலியுறுத்தி தூதுவர் ISOMATA கூறுகையில்: “இப்போது இலங்கை மீட்பு மற்றும் மீளமைப்பு கட்டத்தை அடைந்துள்ளதால், ஜப்பான் இலங்கை மக்களிற்கு துணை நிற்பதில் உறுதியாக உள்ளது’’. தூதுவர் மேலும் கூறுகையில்: “நாம் இன்று கைச்சாத்திட்ட திட்டம், டிட்வா சூறாவளியால் பாதிப்படைந்த பகுதிகளின் மீட்பு, மீள் புனரமைப்பு மற்றும் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஜப்பான் மற்றும் இலங்கை மக்களிடையே நிலைத்திருக்கும் நட்புறவை நீடிக்கும் சின்னமாகவும் திகளும்.” என்றார்.


இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் திரு. வருண ஸ்ரீ தனபால, இவ்வாறு கூறினார்.

“டிட்வா சூறாவளியின் பின்னர் இந்த ஜப்பானின் மானிய உதவிக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். முன்னேற்றமான ரேடியோ சாதனங்களை வழங்குவதன் மூலம், தேசிய பேரிடர் தயார் நடவடிக்கையை வலுப்படுத்த இந்த மானிய உதவி வழிவகுக்கும். இது வலிமையான அவசர தொடர்பு நெட்வொர்க்குகளை உறுதி செய்து, எதிர்கால இயற்கை பேரழிவுகளின்போது செயற்திறன் மிக்க ஒருங்கிணைப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.” என்றார்.

1989 முதல், ஜப்பான் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் (GGP) மூலம் இலங்கைக்கு மொத்தம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவிகளை வழங்கியுள்ளது.