திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய சிறு குளக் கட்டமைப்புகளை புனரமைக்க ஜப்பான் மற்றும் UN-FAO உதவி
2026/4/9

09 ஏப்ரல் 2026, கொழும்பு – ஜப்பான் அரசின் நிதியுதவியுடனும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழில்நுட்ப உதவியுடனும், 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான திட்டமொன்றை, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது. இத்திட்டமானது, இலங்கையின் சிறிய குளங்களைச் சார்ந்த வாழ்வாதாரங்களில் நீர்ப் பயன்பாட்டை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறனை அதிகரிக்கவும் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த 12 மாத கால செயற்திட்டமானது, (மார்ச் 2026 – பெப்ரவரி 2027), திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய சிறு குளக் கட்டமைப்பு முறைகளை மறுசீரமைக்கும். இதன் மூலம் சுமார் 400 சிறு விவசாயிகள் நேரடியாகப் பயனடைவதோடு, நீர் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான உள்ளூர் விவசாய அமைப்புகளும் வலுப்படுத்தப்படும்.
10,000இற்கும் மேற்பட்ட ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கிராமப்புற குளங்களைக் கொண்டுள்ள இலங்கையின் சிறு குளக் கட்டமைப்புகள், நாட்டின் உலர் மற்றும் இடைநிலை வலயங்களில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கையின் முதுகெலும்பாக விளங்குகின்றன. எனினும், பல தசாப்தங்களாக போதிய முதலீடு இல்லாமை, மதகுகளுக்கு அருகே வண்டல் படிதல், நீர்வாழ் களைகள் அதிகளவில் வளர்ந்துள்ளமை மற்றும் வாய்க்கால்கள் சேதமடைந்தமை போன்ற காரணிகளால், இக்குளங்களின் நீர் சேமிப்புத் திறனும், நீர்ப்பாசன வினைத்திறனும் கணிசமாகக் குறைவடைந்துள்ளன.
இந்த புதிய முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி. லால்காந்த, “இலங்கையின் பண்டைய பொறியியல் அறிவுக்குச் சான்றாக, எமது பாரம்பரிய குளக் கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இவை இன்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களின் பிரதானமாக உள்ளன. ஜப்பான் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடனான இந்த காலம் கருதிய ஒத்துழைப்பானது, இக்கட்டமைப்புகளை மீட்டெடுக்க உதவும். அத்துடன் நீர்ப் பயன்பாட்டை மேம்படுத்தி, திருகோணமலை மற்றும் வவுனியா விவசாய சமூகங்களின் தாங்கும் திறனை வலுப்படுத்தும்" என்று குறிப்பிட்டார்.
இந்த புதிய திட்டமானது, குளக் கட்டமைப்பு முறைகளுக்குள் தெரிவுசெய்யப்பட்ட சில சிறிய குளங்களையும் அணைகளையும் புனரமைக்கும். இதன் மூலம் அவற்றின் நீரோட்ட செயற்பாடுகளை சீரமைப்பதுடன், நீர்ப்பயன்பாட்டுத் திறனையும் காலநிலை மாற்றத்தை தாங்கும் சக்தியையும் அதிகரிக்க 'காலநிலைக்கு உகந்த' நீர் முகாமைத்துவ முறைகளையும் அறிமுகப்படுத்தும்.
இந்தத் திட்டமானது, ஒரு ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் தொகுப்பினை நடைமுறைப்படுத்தும். அவையாவன:
நீரைச் சேமிக்கும் அளவை அதிகரிக்கவும், நீரின் தரத்தை மேம்படுத்தவும், குளங்களைச் சுத்தம் செய்தல் மற்றும் அங்கு ஆக்கிரமித்து வளர்ந்துள்ள நீர்வாழ் களைகளை அகற்றுதல்;
• மதகுகளுக்கு அருகே படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றுவதன் மூலம், புவிஈர்ப்பு விசை வழியாக நீர்ப்பாசனம் தடையின்றி பாய்வதை உறுதி செய்தல்.
• சேதமடைந்துள்ள வாய்க்கால்கள், அணைக்கட்டுகள், வான்பாயும் பகுதிகள் மற்றும் மதகு கட்டமைப்புகளை புனரமைத்தல்;
• உணரி (sensor) அடிப்படையிலான கருவிகள் மூலம் நீரை தொடர்ச்சியாக கண்காணிக்கும் கட்டமைப்புகள் மற்றும் அப்போதைய காலநிலை தகவல்களை வழங்கும் கருவிகளை அறிமுகப்படுத்துதல்;
• மாற்று வழியிலான நனைத்தல் மற்றும் உலரவிடும் பாசன முறைகள் (AWD) உட்பட, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற சிறந்த விவசாய நடைமுறைகளை (CSGAP) ஊக்குவித்தல்;
• விவசாயிகளுக்கான நேரடி பயிற்சி பாடசாலைகள் ஊடாக திறன்களை விருத்தி செய்தல் மற்றும் உள்ளூர் நீர் முகாமைத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்.

ஜப்பானின் நிதி உதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் அண்மையில் பூர்த்திசெய்யப்பட்ட ஒரு முயற்சியானது, மாற்று வழியிலான நனைத்தல் மற்றும் உலரவிடுதல் முறை மற்றும் உணரி கருவிகள் (sensors) அடிப்படையிலான நீர்ப்பாசனம் மூலம் சில பருவங்களில் நீர்ப் பயன்பாட்டை 35 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க முடியும் என்பதையும், அதேவேளை விளைச்சலை அதிகரிக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த புதிய திட்டமானது, நவீன தொழில்நுட்பத்தையும் இலங்கையின் பாரம்பரிய நீர் முகாமைத்துவத்தையும் இணைத்து, இத்தகைய வெற்றிகரமான கண்டுபிடிப்புகளை பாரம்பரிய சிறு குளக் கட்டமைப்புகளுக்குள் விரிவுபடுத்தும்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கௌரவ அகியோ இசொமட்டா (Akio Isomata) குறிப்பிடுகையில், "இலங்கையில் காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய விவசாயம் மற்றும் நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதில் ஜப்பான் பெருமை கொள்கிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இதற்கு முன்னரான கூட்டுமுயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த புதிய திட்டமானது, உணரி கருவிகள் (sensors) அடிப்படையிலான நீர்ப்பாசனம் போன்ற நவீன தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவதுடன், சிறு குளக் கட்டமைப்புகளில் வினைத்திறனான நீர்ப் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும். இந்தத் திட்டத்திற்கான ஜப்பானின் நிதியுதவியானது "மனிதப் பாதுகாப்பு" என்ற கருத்தாக்கத்துடன் ஒத்துப்போகிறது. தனிநபர்களை, குறிப்பாக அதிக பாதிப்பினை எதிர்கொள்ளக்கூடிய மக்களை பாதுகாப்பதையும் அவர்கள் கண்ணியத்துடனும் வறுமையற்ற வாழ்வினை வாழும் வகையில் அவர்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஜப்பான் அரசு தனது இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய அம்சமாக இந்தக் கொள்கையை கடைப்பிடிக்கின்றது. நிலைபேறுமிக்க தன்மை மற்றும் கிராமப்புற சமூகங்களின் நீண்டகால செழுமைக்கான எமது கூட்டு அர்ப்பணிப்பினை இந்த கூட்டாண்மை வெளிப்படுத்துகின்றது என நாம் நம்புகிறோம்" என்றார்.
நீர்ப்பாசன வினைத்திறனை மேம்படுத்துவதன் மூலம், பயிர்ச்செய்கை செறிவினை அதிகரிக்கவும், நெல் விளைச்சலை நிலையானதாக மாற்றவும், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் அருகிவரும் நன்னீர் வளங்கள் மீதான அழுத்தத்தை குறைப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மேம்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்தை பெற்றுக்கொள்ளுதல் ஊடாக, மேலதிகமாக சுமார் 2,000 குடும்ப உறுப்பினர்கள் மறைமுகமாக பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள சிறு குளங்களைப் புனரமைப்பதற்கு ஜப்பான் அரசு வழங்கும் நிதியுதவியை வரவேற்று, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி திரு. விம்லேந்திர ஷரண் குறிப்பிடுகையில், “இலங்கையின் உலர் வலயத்தில் உள்ள சிறு விவசாயிகளுக்கு சிறு குளங்களை அடிப்படையாகக் கொண்ட சூழல் தொகுதிகள் மிக முக்கியமான வாழ்வாதாரங்களாகும். பாரம்பரிய உட்கட்டமைப்புகளை புனரமைப்பதோடு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயிகளின் திறன் விருத்தி ஆகியவற்றையும் இணைப்பதன் மூலம், வெள்ளம் மற்றும் வறட்சிக்கு எதிரான நெகிழ்வுத்தன்மையை வலுப்படுத்தும் அதேவேளையில், குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக விளைச்சலை பெற்றுக்கொள்வதற்கு இத்திட்டம் சமூகங்களுக்கு வழிவகுக்கும்" என்றார்.
நீரோட்ட செயற்பாடுகளை சீரமைப்பதன் மூலமும், நீர் விரயத்தை குறைப்பதன் மூலமும், தரவு அடிப்படையிலான நீர்ப்பாசனக் கருவிகளைக் கொண்டு விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலமும், இலங்கை முழுவதும் காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய சிறு குள முகாமைத்துவத்திற்கான ஒரு முன்மாதிரி திட்டத்தை உருவாக்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது
