டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் உள்நாட்டு மீன்பிடி தொழிலை மீளக் கட்டியெழுப்ப இலங்கையுடன் இணைந்து செயற்படும் ஜப்பான் மற்றும் FAO அமைப்பு
2026/5/29

29 மே 2026, கொழும்பு - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீன்பிடி சமூகங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், அவர்களின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கும், ஜப்பானிய அரசாங்கமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டிணைந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இத்திட்டமானது, ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகியோ இசோமடா மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான FAO பிரதிநிதி திரு. விம்லேந்திர ஷரண் ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வு கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் முன்னிலையில் இடம்பெற்றது.
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மொத்தம் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், 2026 ஜூன் முதல் 2027 நவம்பர் வரை அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் செயற்படுத்தப்படும். இத்திட்டம் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த மீன்பிடி அமைப்புகளுக்கு உதவும்.
இலங்கையின் பல பகுதிகளில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திய டிட்வா சூறாவளி, கிழக்கு மாகாணத்தின் உள்நாட்டு மீன்பிடித் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. வெள்ளநீர் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து அவசர நிலைமையின் போது வெளியேற்றப்பட்ட நீரினால் பெருமளவிலான மீன் குஞ்சுகள் மற்றும் வளர்ச்சியடைந்த மீன்கள் அழிந்தன. மேலும், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உட்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. இது மீன்களின் இனப்பெருக்கத்தையும் வளர்ப்பு சுழற்சிகளையும் பாதித்தது. இதன் விளைவாக மீன் இருப்பு குறைந்து, ஏற்கனவே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உள்நாட்டு மீனவக் குடும்பங்களின் வருமானம் மற்றும் மீன் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம், உள்நாட்டு மீன்பிடி உற்பத்தி மற்றும் வாழ்வாதாரங்களை விரைவாக மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பெரியளவிலான நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சுகளை விடுதல், மிதக்கும் மீன் வளர்ப்பு கூடுகளை வழங்குதல், மீன் இனப்பெருக்கத்திற்கு அவசியமான ஹோர்மோன்களைப் பெறுதல் மற்றும் எதிர்காலத்தில் வெள்ளம் மற்றும் நீர்த்தேக்கங்களில் பெருக்கெடுக்கும் நீரினால் மீன்கள் வெளியேறுவதை தடுப்பதற்கான தடுப்பு வலைகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 30 நீர்த்தேக்கங்களைச் சேர்ந்த 1,504 மீனவர்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும். இதன் மூலம் 6,000இற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உணவுப் பாதுகாப்பு, போஷாக்கு மற்றும் நிலையான வருமானம் மூலம் பயனடைவார்கள். இந்தத் திட்டத்தின் மூலம், இலக்கு வைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் 5.48 மில்லியன் மீன் குஞ்சுகள் விடப்படும். மேலும், ஆண்டுக்கு சுமார் 16 மில்லியன் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யக்கூடிய, சமூகத்தால் நிர்வகிக்கப்படும் மீன் வளர்ப்பு கூடுகள் அமைக்கப்படும். இதன் மூலம் மீன் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "டிட்வா சூறாவளி கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்நாட்டு மீனவ சமூகங்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. அவர்களில் பலர் தம் வாழ்வாதாரத்திற்கும் உணவுத் தேவைக்கும் முழுமையாக நீர்த்தேக்க மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ளனர். இந்நிலையில், ஜப்பானிய அரசாங்கம் மற்றும் FAO அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம், மீன் வளத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், வருமானத்தை மீட்டெடுக்கவும் உதவும். அத்துடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களால் வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பாதிப்பினை எதிர்கொள்ளக்கூடிய மீனவக் குடும்பங்களின் மீள்திறனை இது வலுப்படுத்தும்."

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அதிமேதகு அகியோ இசோமடா, “இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய திட்டம், சூறாவளியால் இழந்த மீன்பிடி வளங்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதுடன், எதிர்கால காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கக்கூடிய மீன்பிடி சமூகங்களை உருவாக்குவதற்கான ஒரு முதலீடாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மிதக்கும் மீன் வளர்ப்பு கூடுகள் மற்றும் தடுப்பு வலைகளை நிறுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீன்பிடி வளங்களைப் பாதுகாப்பதற்கும், எதிர்கால வானிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் மிகவும் அவசியமான தொழில்நுட்ப அணுகுமுறைகளாகும். மேலும், அதிக எரிபொருள் நுகர்வால் கடல்சார் மீன்பிடித்தொழில் செலவுகள் அதிகரித்து வரும் வேளையில், உள்நாட்டு மீன்பிடி உற்பத்தியைப் பேணுவதும் மேம்படுத்துவதும் அவசியமாகிறது. இது குறைந்த எரிபொருளைப் பயன்படுத்துவதுடன், நாட்டின் முக்கிய புரதச்சத்தை வழங்கும் ஆதாரமாகவும் இருப்பதால், இலங்கையின் தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு இது மிகவும் முக்கியமானது. இலங்கையின் நிலைபேறான மற்றும் மீள்திறன் கொண்ட வளர்ச்சிக்கான பயணத்தில், ஜப்பானிய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் உறுதியான நண்பனாகவும் பங்காளியாகவும் தொடர்ந்து துணை நிற்பார்கள்,” என்றார்.
உற்பத்தித் திறனை மீட்டெடுப்பதிலும், எதிர்காலத்திற்குத் தேவையான மீன்பிடி முறைகளை வலுப்படுத்துவதிலும் இத்திட்டம் கவனம் செலுத்துவது தொடர்பாக, திரு. விம்லேந்திர ஷரண் எடுத்துரைத்தார். “இத்திட்டமானது, உடனடி நிவாரணத்துடன் நின்றுவிடாமல், நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய உள்நாட்டு மீன்பிடி முறைகளை மீண்டும் கட்டியெழுப்ப சமூகங்களுக்கு உதவுகிறது. நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சுகளை விடுதல், மீன் குஞ்சு உற்பத்தியை மேம்படுத்துதல், பாதுகாப்பு உட்கட்டமைப்புகளை அமைத்தல் மற்றும் சமூகத்தின் திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், எதிர்கால காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வலிமையை பெறவும் FAO உதவுகிறது." என்றார்.
இத்திட்டத்தை, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு, இலங்கை தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூர் கலாச்சாரம் சார்ந்த மீன்பிடி அமைப்புகளுடன் இணைந்து FAO நடைமுறைப்படுத்தும். மீன் குஞ்சுகளை வளர்த்தல், கூடுகளைப் பராமரித்தல், தடுப்பு வலைகளை பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான மீன்பிடி பரிபாலனம் குறித்து தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், இந்தத் திட்டம் நீண்ட காலத்திற்குத் தொடர்வதையும், சமூகத்தினர் இதனை சொந்தமாக நிர்வகிப்பதையும் உறுதிப்படுத்த முடியும்.
