அனர்த்த கழிவு முகாமைத்துவம் மற்றும் சமூக மறுவாழ்வு முன்னெடுப்பு மூலம் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த இலங்கையும் ஜப்பானும் கூட்டினைவு
2026/6/10

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்குக் கழிவுகளை அகற்றுதல், சேவைகளை மீட்டெடுத்தல் மற்றும் மீள்திறன் கொண்ட சமூக உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் புதிய திட்டம் ஆதரவளிளக்கவுள்ளது.
கொழும்பு, இலங்கை – 10 ஜூன் 2026: ஜப்பான் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும் (UNDP), இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் புதிய திட்டமொன்றில் இன்று கைச்சாத்திட்டன.
“சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் பங்கேற்பு அடிப்படையிலான பேரிடர் கழிவுகள் அகற்றல் மற்றும் சமூக வசதிகள் மறுசீரமைப்பு திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இம்முயற்சி, அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மீளமைத்தல், சுற்றுச்சூழல் அபாயங்களை குறைத்தல் மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூகங்களின் மீட்சித்திறனை வலுப்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்ட ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு அகியோ இசொமதா மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோகபண்டார உள்ளிட்ட அரச மற்றும் கூட்டாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
2025 நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின் பேரழிவான தாக்கங்களால் நாடளவில் சுமார் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி நடவடிக்கைகளையும் மீட்பு முயற்சிகளையும் இணைக்கும் முக்கியமான முன்னேற்றமாக இத்திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அதிகளவில் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான மத்திய மாகாணத்திற்கு இது பெரும் ஆதரவாக அமையும்.
ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், இம்முயற்சி மின்சார முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி அனர்த்தத்துடன் தொடர்புடைய மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் மற்றும் இலகு கழிவுகளின் சேகரிப்பு மற்றும் மேலாண்மைக்கு ஆதரவளிக்கும். அதேவேளை, சுகாதாரம், கல்வி, குழந்தைப் பராமரிப்பு மற்றும் சமூக ஆதரவு போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் பல்நோக்கு சமூக வசதிகளையும் புனரமைக்கும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 228,500 பேர் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சேவைகளுக்கான அணுகல் மேம்படுத்தப்படுவதாலும் கழிவு மேலாண்மை அமைப்புகள் வலுப்படுத்தப்படுவதாலும், கூடுதலாக 700,000 சமூக உறுப்பினர்கள் மறைமுகமாகப் பயனடைவார்கள்.
இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அதிமேதகு அகியோ இசொமதா அவர்கள் கூறியதாவது:“பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவத்தில் சமூகத்தின் அனைத்து துறைகளின் பங்களிப்பும் அவசியம். பங்கேற்பு சார்ந்த மற்றும் நிலையான அணுகுமுறையின் மூலம் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, சமூகங்களின் மீட்சித்திறனை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். உள்ளூர் சமூகங்களை திட்ட அமலாக்கத்தில் நேரடியாக ஈடுபடுத்தி, அவர்களை வலுப்படுத்துவதன் மூலம் சமூக ஒற்றுமையையும் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்த முடியும். ‘Build Back Better’ என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் பேரிடர் முன்னெச்சரிக்கை, பதிலளிப்பு மற்றும் மீட்பு திறன்களை மேலும் வலுப்படுத்த ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைக்கும்,” என்றார்.
இலங்கை அரசாங்கத்தின் மீட்பு முயற்சிகளை வலியுறுத்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ டாக்டர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் கூறியதாவது: “டிட்வா சூறாவளிக்குப் பின்னரான எங்கள் தேசிய மீட்பு முயற்சிகளில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. முக்கியமான சமூக உட்கட்டமைப்புகளை மீளமைப்பதன் மூலமும், கழிவு மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மீண்டும் பெறவும், தங்களது வாழ்க்கையை கண்ணியத்துடன் மீளக் கட்டியெழுப்பவும் நாம் உறுதி செய்கிறோம்.
தாங்குதிறனை வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய மீட்சியை ஊக்குவிக்கவும் நாம் இணைந்து செயல்படும் இந்நிலையில், இந்த கூட்டாண்மையை இலங்கை அரசாங்கம் மிகவும் மதிக்கிறது,” என்றார்.
இத்துறையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் தலைமைத்துவத்தை மேலும் வலியுறுத்தி, இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திருமதி அசுசா குபோடா அவர்கள் கூறியதாவது:“மீட்பு என்பது இழந்தவற்றை மீளக் கட்டியெழுப்புவதில் மட்டும் அல்ல. அதற்கு பதிலாக, மேலும் சிறப்பாக முன்னேறிச் செல்லக்கூடிய வகையில் கட்டியெழுப்புவதாகும். இம்முயற்சியின் மூலம், முக்கியமான சேவைகளை மீளமைக்கவும், எதிர்கால அதிர்வுகளுக்கு எதிரான தாங்குதிறனை மேலும் வலுப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் சமூகங்களுடன் இணைந்து செயல்படும்.
யாரையும் பின்தங்க விடாத, அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மீட்சிக்கான எங்கள் கூட்டு அர்ப்பணிப்பை, இலங்கை அரசாங்கத்துடனும் ஜப்பான் அரசாங்கத்துடனும் கொண்டுள்ள எங்கள் கூட்டாண்மை பிரதிபலிக்கிறது,” என்றார்.

இத்திட்டம் மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும். குறிப்பாக, உட்கட்டமைப்புகளுக்கு கணிசமான சேதம் ஏற்பட்ட, சேவைகள் பாதிக்கப்பட்ட, அனர்த்தக் கழிவுகள் குவிந்த பாதிப்புகளை எதிர்கொண்ட கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் இதில் உள்ளடங்கும்.
உடனடி மீட்பு தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், சமூக அடிப்படையிலான கழிவு சேகரிப்பு மற்றும் வசதிகள் புனரமைப்பு நடவடிக்கைகள் மூலம் வாழ்வாதார வாய்ப்புகளையும் இம்முயற்சி வழங்குகிறது. குறிப்பாக, பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் பங்கேற்புக்கு இத்திட்டம் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.
தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப, காலநிலைத் தாங்குதிறனை வலுப்படுத்துதல், கழிவு மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் நிலையானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான அபிவிருத்திப் பாதைகளை ஆதரித்தல் ஆகிய இலங்கையின் பரந்த முயற்சிகளுக்கும் இத்திட்டம் பங்களிக்கிறது.
