வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்குகிறது

2026/9/29

 
செப்டம்பர் 29, 2026 அன்று, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மாண்புமிகு அகியோ இசொமதா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கான மானிய ஒப்பந்தத்தில் Skavita Humanitarian Assistance and Relief (SHARP) இன் திட்ட மேலாளர் திரு. சரத் ஜயவர்தனவுடன் கையெழுத்திட்டார்.
 

 
ශ්‍ஜப்பான் அரசு இந்தத் திட்டத்திற்கு USD 447,432 (தோராயமாக ரூ. 148 மில்லியன்) வழங்கியுள்ளது. இதை SHARP நிறுவனம் இலங்கையின் வட மாகாணத்தில் தனது மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த உள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ், 190,000 சதுர மீட்டருக்கும் அதிகமான நிலம் கண்ணிவெடி அகற்றி விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 7,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நிலங்களுக்குத் திரும்பவும், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 11,500 மக்கள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் உதவும். 2002 முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு முக்கிய நன்கொடையாளராக இருந்து வருகிறது, மேலும் அதன் மொத்த உதவி 50 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் SHARP நிறுவனத்தின் அயராத முயற்சிகளுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தூதுவர் இசொமதா பேசும் போது: “இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான மீளக்கட்டியெழுப்பல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஒரு உறுதியான பங்காளி என்ற வகையில், 2002 ஆம் ஆண்டு முதல், அதாவது உள்நாட்டுப் போர் முடிவடைவதற்கு முன்பிருந்தே, ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கு ஜப்பான் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளது.
 

 

இன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், இலங்கை மக்களுக்கு, குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொடர்ந்தும் உதவுவதற்கான ஜப்பானின் உறுதிப்பாட்டுக்கு மற்றொரு சான்றாகும்” என்றார். பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்த தனது அண்மைய வட மாகாண விஜயத்தைக் குறிப்பிட்டு, தூதுவர் இசொமதா மேலும் கூறியதாவது: “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை மேலும் பரந்த அளவில் முன்னெடுப்பதற்காக, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளையும் ஏனைய முயற்சிகளையும் துரிதப்படுத்தும் வகையில், சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் புலம்பெயர் சமூகத்தை ஈடுபடுத்தி, தற்போதுள்ள நன்கொடையாளர்களுக்கு அப்பால் சென்று ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்துமாறு இலங்கை அரசாங்கம் உட்பட அனைத்துப் பங்குதாரர்களுக்கும் நான் அழைப்பு விடுக்க விரும்புகிறேன். முழு நாட்டினதும் நிலையான அபிவிருத்திக்காக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பிராந்தியங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கும் முழுமையான அணுகுமுறையை வலுப்படுத்துவது இன்றியமையாததாகும்” என்றார்.
 
 
 
இந்த மானிய உதவி பெறுவது குறித்து கருத்துத் தெரிவித்த SHARP நிறுவனத்தின் திட்ட மேலாளர் திரு. சரத் ஜயவர்தன இவ்வாறு கூறினார். “2016ஆம் ஆண்டில் SHARP கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஆரம்ப நிதியை GGP ஜப்பான் ஊடாக வழங்கியமைக்காக, இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு SHARP மிகுந்த நன்றியுடையதாகவும் கடமைப்பட்டதாகவும் இருக்கிறது. 2016 முதல் 2021 வரை SHARP இன் ஒரே நிதி வழங்குநராக இருந்ததற்காகவும், அதன் பின்னர் 2022 முதல் SHARP இன் பிரதான நன்கொடையாளராகத் தொடர்ந்தும் இருந்து வருவதற்காகவும் ஜப்பானை நாம் மிகவும் பாராட்டுகிறோம்.”