5-வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகள் (அய்ச்சி-நகோயா 2026)-க்கான வழியனுப்பும் நிகழ்வு

2026/10/5

2026-ஆம் ஆண்டு அய்ச்சி-நகோயாவில்  நடைபெறவுள்ள 5-வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை விளையாட்டு வீரர்களுக்கான வழியனுப்பும் நிகழ்வு, இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகத்தில் அக்டோபர் 5-ஆம் திகதி நடைபெற்றது. இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மேதகு அகியோ இசொமதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு. ஏ.எச்.எம்.யு. அருண பண்டார  மற்றும் இலங்கை தேசிய பாராலிம்பிக் குழுவின் தலைவர் பிரிகேடியர் டி. கே. அலுதெனிய (ஓய்வுபெற்ற) ஆகியோர் கலந்துகொண்டார்.


 
"Imagine One Heart" (ஒரே இதயத்தை கற்பனை செய்வோம்) என்ற கருப்பொருளுடன், 5-வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகள் (அய்ச்சி-நகோயா 2026) அக்டோபர் 18 முதல் 24 வரை நடைபெறவுள்ளன. இக்காலகட்டத்தில் 18 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதோடு, ஆசியா முழுவதிலுமிருந்து சுமார் 4,000 விளையாட்டு வீரர்களும் அணிகளின் அதிகாரிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர். செழுமையான வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொழில்துறை சார்ந்த புத்தாக்கங்களுக்குப் பெயர் பெற்ற அய்ச்சி (Aichi) மாகாணத்தில் உள்ள நகோயா மற்றும் பிற நகரங்களே இப்போட்டிகளின் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.

 

தூதுவர் இசொமதா தனது உரையில், "கடந்த மாதம் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற திரு. ரூமேஷ் தரங்கவைப் பின்பற்றி, நீங்களும் இயன்றவரை அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வீர்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார். இருப்பினும், பதக்கங்கள் மற்றும் வெற்றி மேடைகளைத் தாண்டி முக்கியமான விஷயங்கள் உள்ளன; அவை நேர்மையான விளையாட்டு மனப்பான்மை மற்றும் உங்களால் இயன்றவரை சிறந்து விளங்குவதற்கான முயற்சி ஆகியவை ஆகும். நீங்கள் இலங்கைக்குப் பெருமை சேர்ப்பீர்கள் என்றும், அடுத்த தலைமுறை இலங்கை இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பீர்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். ஜப்பான் மற்றும் அய்ச்சி-நகோயா மக்கள் உங்களுக்கு உற்சாகமளிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இலங்கை விளையாட்டு வீரர்களாகிய உங்கள் பயணம் பாதுகாப்பானதாகவும், உடல்நலம் சிறப்பானதாகவும் அமையவும், உங்களுக்குச் சிறந்த வெற்றி கிடைக்கவும வாழ்த்துகிறேன்!

 
 



இலங்கை அணிக்கு ஜப்பானியத் தூதரகம் முழுமையான வெற்றியை வாழ்த்துவதுடன், இப்போட்டிகளில் அவர்களின் சிறப்பான சாதனைகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறது.